2021 மே 10, திங்கட்கிழமை

காணிகளை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு தருமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப்பணிக்காக 2008ஆம் ஆண்டு காணி இழந்தவர்களுக்கு நஷ்டஈட்டை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீமுக்கும் ரிஷாட் பதியுதீனுக்கும் ஒலுவில் துறைமுக நிர்மாணப்பணிக்காக காணி இழந்தோர் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.அன்சார்  புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப்பணிக்காக 2008ஆம் ஆண்டு 48 பேரின் காணிகள் 49.5 ஏக்கர் சுவீகரிக்கப்பட்டது. இதில் 32 பேரின்; காணிகளுக்கு அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் நஷ்டஈடு வழங்குவதற்காக விலை மதிப்பீடு செய்யப்பட்டது.

ஏனையோரின் காணிகளுக்கு இதுவரையில் விலை மதிப்பீடு செய்யப்படவில்லை. விலை மதிப்பீடு செய்யப்பட்ட காணி உரிமையாளர்களில் 19 பேர் தங்களின் பொருளாதார நிலைமை, பிள்ளைகளின் கல்வி, அபிவிருத்தி ஆகியவற்றை கருத்திற்கொண்டு ஒரு பேர்ச் காணிக்கு 30,000 ரூபாய் படி  நஷ்டஈடு பெற்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'மேலும், எஞ்சியோருக்கு அரச விலை மதிப்பீடு அதிகூடியதென்ற அடிப்படையில் அரச விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகையை வழங்குவதற்கு இலங்கைத் துறைமுக அதிகாரசபை மறுத்துவிட்டது. இது காணி சுவீகரிப்பு சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும். சட்டப்படி கிடைக்கவேண்டிய நஷ்டஈட்;டை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், கடந்த அரசாங்கத்தில் பலன் கிடைக்கவில்லை.

ஒலுவில் துறைமுக காணி சுவீகரிப்பினால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போமென மக்களிடம் கடந்த பொதுத்தேர்தல் கால பரப்புரையின்போது, நீங்கள் இருவரும் வாக்குறுதியளித்தீர்கள். எனவே, இந்த விடயத்தில் நீங்கள் இருவரும்; ஒருமித்து உரிய அமைச்சருடன் கலந்துரையாடி, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு அரச விலை மதிப்பீட்டின் படி கிடைக்கவேண்டிய நஷ்டஈட்டை பெற்றுத்தர வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X