2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

தனியான உள்ளூராட்சி சபைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு கோரிக்கை

Administrator   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, பி.எம்.எம்.ஏ.காதர்

சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபைக்கு கல்முனைத் தொகுதி மக்கள் அங்கீகாரத்தை வழங்கியிருப்பதால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவன செய்ய வேண்டும் என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்த மன்றம் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

2015-08-09ஆம் திகதி கல்முனையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தங்களது உரையின்போது அமையப்போகும் புதிய அரசாங்கத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் முன்மொழியப்பட்டுள்ள சாய்ந்தமருது பிரதேசத்துக்கான தனியான உள்ளூராட்சி சபை ஏற்படுத்தித் தரப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கியமைக்காக இப்பிரதேச மக்கள் சார்பாக ஏலவே எமது மறுமலர்ச்சி மன்றம் தங்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததை இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகமூட்டுகின்றோம்.

உண்மையில் வாய்மை தவறாத உங்களது வாக்குறுதியை ஏற்று சாய்ந்தமருது மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியை பெருவாரியாக ஆதரித்து ஆணை வழங்கியுள்ள அதேவேளை, கல்முனை மாநகர சபை பகுதி மக்களும் அதற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்து கல்முனைத் தொகுதி வெற்றிக்கு வழி வகுத்துள்ளனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஆகையால், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கல்முனை மாநகர சபை கலைக்கப்பட்டு அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ள சூழ்நிலையில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு ஆவன செய்யுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .