2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

'தமிழ் மக்கள் இழந்தவற்றை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் உள்ளோம்'

Suganthini Ratnam   / 2016 மே 23 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

தமிழ் மக்கள்; இழந்தவைகள் அதிகம் என்பதுடன், அவற்றை மீளவும் கட்டியெழுப்ப வேண்டிய நிலைமையில் தற்போது உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

எல்லைக் கிராமங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் கலை, கலாசாரம் பண்பாடுகள் மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தற்போது சவால் நிறைந்த முக்கிய பணியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்துசமய அறநெறிக் கல்வி கொடிவார நிகழ்வு, திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தற்போதும் எமது சமூகம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றன. யுத்தம் முடிந்தபோதிலும், யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் அவர்களைத் தொடர்ந்தவண்ணமே உள்ளன' என்றார்.  

'எல்லைக் கிராமங்களில் இதன் தாக்கங்களை காணக்கூடியதாக இருக்கின்றது. அண்மையில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் கோவில்கள் சேதமாக்கப்பட்டதன் மூலம் இதை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இவ்வாறான சம்பவங்களை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. இதற்குத் தீர்வு பெறும் வகையில் எமது எல்லைக் கிராமங்களின் எல்லைகள், கலை, கலாசாரங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை நாம் அனைவரும் ஒன்றுபட்டு விரைவாக முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முரண்பாடுகளைக் களைந்து இன ஐக்கியத்துடன் நாம் வாழ வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.  

இந்துசமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்துசமய அறநெறிக் கல்வி கொடி வாரம், மே மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதிவரை நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .