2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

'தமிழ் மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 12 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

தற்போது தமிழ் மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதிலும் கல்முனைப்பகுதியில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்காக தமிழ் அரசியல் தலைமைகளும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஒரு நிலையான சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன்,  அதற்கான முன்னெடுப்புகளை மிக விரைவில் மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

சர்வதேச கூட்டுறவுதினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தால் நடத்தப்பட்ட கூட்டுறவுதின நிகழ்வு நேற்றுத் திங்கட்கிழமை நற்பிட்டிமுனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'தமிழ்ப் பிரதேசங்களில் இருந்த சங்கங்கள்  சுதந்திரமாக செயற்படமுடியாத நிலை 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்தது. இந்நிலையினால் பல சங்கங்கள்  மற்றும் அச்சங்கங்களின் தலைமைகளும் சரியான முடிவெடுத்து செயற்படமுடியாத அரசியல் சூழ்நிலை காணப்பட்டது. ஆனால், இன்று அவ்வாறு இல்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் சங்கங்கள் சுயமாக தங்களது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றன. இந்நிலையில்தான் கல்முனை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் இன்று ஏனைய சங்கங்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட்டு வருகின்றமை பாராட்டுக்குரியது

யுத்தத்தினாலும் வறுமையின் காரணத்தினாலும் தமிழ் இளைஞர்,  யுவதிகளில் பலர் தனியார் கடைகளில் குறைந்த சம்பளத்துக்கு வேலைசெய்து வருவது கவலையாக இருக்கின்றது. இந்நிலையில் இப்பகுதியில் தொழில்பேட்டை அமைத்து அவர்களுக்கு தொழிலை மேற்கொள்ள உதவவேண்டும். அதற்கு நல்லாட்சி அரசாங்கம் உதவிகளைச் செய்யவேண்டும்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசம் மிகவும் முக்கியமானதாகும். இப்பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஆனால், கடந்த காலங்களில் சில அரசியல் தலைவர்கள் கையாண்ட விடயம் தமிழ் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையினை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், தமிழ் மக்களும் முஸ்லிம்களும் இப்பகுதியில் ஒற்றுமையாக ஒரு சமூகத்தை மற்றைய சமூகம் மதித்து நடக்கின்றமை பாராட்டுக்குரியது. ஆனால் இம்மக்களை குழப்புவது ஒருசில அரசியல் தலைமைகளே' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .