2021 மார்ச் 01, திங்கட்கிழமை

தேசிய போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யூ.எல். மப்றூக்)

அழைப்புக் கடிதம் பிந்திக் கிடைத்ததால், அகில இலங்கை பாடசாலைகளுக்கான தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு முடியாமல் போன, சம்மாந்துறை வலயத்தினைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஏதாவதொரு வகையில் நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பார் எம்.ரி.எம்.நிஸாம் தெரிவித்தார்.

தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருந்த மாணவர்களுக்கு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தினர் அழைப்புக்களை தாமதித்து வழங்கியமை தொடர்பான விடயத்தில், மாகாணக் கல்வி அலுவலகம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து பணிப்பாளர் நிஸாமிடம் நாம் வினவிய போதே அவர் மேற்படி விடயத்தைக் கூறினார்.

இது தொடர்பில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஸாம் மேலும் தெரிவிக்கையில்,

சம்மாந்துறைக் கல்வி வலயத்தினைச் சேர்ந்த சில மாணவர்கள் தேசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என ஊடகங்கள் மூலம் அறியக் கிடைத்தது.  இந்த விடயத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டமைக்காக நான் மனம் வருந்துகிறேன்.

இது தொடர்பில் என்ன நடந்தது என்பதை அறிவரற்காக, சுதந்திரமானதொரு விசாரணைக் குழுவொன்றினை நியமித்திருக்கின்றேன்.

என்றாலும், மாகாணக் கல்வித் திணைக்களம் இது தொடர்பில் பிழையாக நடந்ததாக நான் கருதவில்லை. ஏனென்றால் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளரின் வீட்டில் கடந்த 22ஆம் திகதி மேற்படி விளையாட்டுப் போட்டிக்கான விபரங்கள் அடங்கிய ஆவணங்களை கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒப்படைத்திருந்தார்.

22 ஆம் திகதி விடுமுறை தினமாக இருந்தது. அதனால், விளையாட்டுப் போட்டி தொடர்பான ஆவணங்களை ஒப்படைப்பது தொடர்பில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளரோடு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் தொலைபேசியில் பேசினார். அதன்போது, அந்த ஆவணங்களை தனது வீட்டில் ஒப்படைக்குமாறு சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர்  கோரியுள்ளார். அதற்கிணங்கவே, வலயக் கல்விப் பணிப்பாளரின் வீட்டில் விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பான மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆவணங்களை ஒப்படைத்திருக்கின்றார்.

அதுமட்டுமன்றி, விளையாட்டுப் போட்டி தொடர்பான அந்த ஆவணங்கள் முக்கியமானவை என்றும், அவற்றினை அவசரமாக அனைத்துப் பாடசாலைகளுக்கும் விநியோகிக்குமாறும் மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் கூறியிருக்கின்றார்.

அதேவேளை, வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளமை போன்று, விளையாட்டுப் போட்டி தொடர்பான விபரங்கள் அடங்கிய அந்த ஆவணத்தில் சிங்கள மொழியில் மட்டும் தகவல்கள் இடம்பெறவில்லை. தமிழிலும், ஆங்கிலத்திலும் கூட அதில் உரிய விபரங்களும் அறிவுறுத்தல்களும் இடம்பெற்றிருந்தன.

எது எவ்வாறிருந்த போதும், இதில் மாணவர்களே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போயிருக்கின்றன.

எனவே, இது தொடர்பில் இரண்டு நடவடிக்கைகளை என்னால் மேற்கொள்ள முடியும். முதலாவது, இவ்விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிவது. இரண்டாவது, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஏதாவதொரு வகையில் நிவாரணங்களை வழங்குவதற்கான உபாயங்களைத் தேடிக் கொள்வது.

மேற்கூறிய  இரண்டுக்குமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் நாம் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் தனது பணிப்புரைக்கிணங்க விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் கடந்த புதன்கிழமை தனக்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்துள்ளதாகவும் பணிப்பாளர் நிஸாம் தெரவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .