2021 மே 18, செவ்வாய்க்கிழமை

செந்நெல் கிராம மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

சம்மாந்துறை – செந்நெல் கிராமத்தில் குடிநீர் மற்றும் வீதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமையினால் - தங்கள் அன்றாட வாழ்வில் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  

இக்கிராம மக்களின் மேற்படி பிரச்சினைகள் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது, செந்நெல் கிராமமானது 1948ஆம் ஆண்டு கல்லோயாத் திட்டத்தின் போது உருவாக்கப்பட்டதாகும். சுமார் 1400 குடும்பங்கள் வாழும் இந்தக் கிராமம், கடல் மட்டத்திலிருந்து 100 அடிகளுக்கும் அதிமான உயரத்தில் அமைந்துள்ளது.

மலை மற்றும் கற்பாறைகள் அதிகமுள்ள இக்கிராமத்தினர்; குடிநீர் மற்றும் பாதைகள் இன்றி மிகக் கடுமையான கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நிலத்தின் கீழ் பாறைகள் உள்ளமையால், குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக இங்கு கிணறுகளை அமைப்பதென்பது மிகவும் கஷ்டமானதொரு காரியமாகும். இதனால், இங்குள்ள மக்கள் குடிநீருக்கான பிரச்சினையினை நாளாந்தம் எதிர்கொள்கின்றனர்.

அதேவேளை, செந்நெல் கிராமத்தின் பிரதான வீதியினை ஒட்டிய இடங்களில் நீர்வழங்கல் அபிவிருத்தி அதிகார சபையினால் குடிநீரைப் பெறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள போதும் கிராமத்தின் உட்பகுதிகளில் குடிநீருக்கான வசதிகள் இதுவரை செய்து கொடுக்கப்படாமை குறித்து இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால், இப்பகுதி மக்கள் தமது உயரமான குடியிருப்புப் பகுதிகளிலிருந்து நீண்ட தூரம் பயணித்தே குடிநீரைப் பெற்றுக்கொள்ள வேண்டிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, செந்நெல் கிராமத்தில் மிக முக்கியமான வீதிகள் அமைக்கப்படாமையால் இப்பகுதி மக்கள் போக்குவரத்துச் செய்வதில் பாரிய சிக்கல்களை தினமும் எதிர்கொண்டு வருகின்றனர். வீதிகளற்ற நிலையில் பாறைகளின் மேலும் மலைப்பாங்கான இடங்களிலும் பயணம் செய்யும் மக்கள் தினமும் பல்வேறு விதமான விபத்துக்களை முகம் கொள்கின்றனர்.

கடந்த காலங்களில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் செந்நெல் கிராமத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். அதேவேளை, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களும் இங்கு உள்ளன. மேலும் இராணுவத்தினருக்கான ரணவிரு திட்டமும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு கிராமத்தின் அடிப்படைத் தேவைகளான வீதி மற்றும் குடிநீர் வசதிகளைத் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளை இதுவரை எவரும் மேற்கொள்ளாமையானது கவலை தரும் விடயமாகும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

எனவே, செந்நெல் கிராமத்தின் குடிநீர் பிரச்சினை மற்றும் வீதி வசதியின்மை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கைகளை உரிய அதிகாரிகளும், அதிகாரம் கொண்ட அரசியல்வாதிகளும் மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0

  • hamaza Tuesday, 27 September 2011 03:59 PM

    இறைவன் உங்கள் மீது தன் கருணையை செலுத்துவானாக ....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .