2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

திவிநெகும வலயம் உருவாக்கம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திணைக்களத்தின் கீழ், பல மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் திவிநெகும வலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அம்பாறை மாவட்டம், மொனராகலை மாவட்டம், அம்பாந்தோட்டை மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அம்பாந்தோட்டையில் வலயப் பணிமனை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வலயயங்களின் பணிகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் செயற்பாட்டுக்கான வலயக் காரியாலயங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

அம்பாந்தோட்டை வலயத்துக்கான வலயக் காரியாலயம் எதிர்வரும் எப்ரல் 27ஆம் திகதி அம்பாந்தோட்டை பழைய தொழிலாளர் காரியாலயத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் திறந்த வைக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் சகல பணிகளும் அங்கிருந்தே முன்னெடுக்கப்படும் என திவிநெகும திணைக்களத்தின் அம்பாந்தோட்டை வலயத்துக்கு பொறுப்பான மேலதிக பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

திவிநெகும திணைக்களத்தின் அம்பாந்தோட்டை வலயத்துக்கு பொறுப்பாக ரஞ்சித் குணசேகர நியமிக்கப்பட்டதன் பின்னர் கடமை நிமித்தம் அவர் செவ்வாய்க்கிழமை (08), அம்பாறைக்கு விஜயம் செய்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட சமுர்த்தி காரியாலய உத்தியோகஸ்தர்களை சந்தித்த அவர், அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன்போது அவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 'குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து எடுக்கப்படுகின்ற எந்தவொரு அபிவிருத்தி முன்னெடுப்புக்களும் அடிமட்ட மக்களுக்கு  சரியான முறையில் சென்றடையாது' என குறிப்பிட்டார்.

'எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய பொறுப்புக்கூற வேண்டிய அமானிதமான பணிகளாகும். கடந்த கால செயற்பாடுகளிலிருந்த முற்றிலும் மாறுபட்ட ரீதியில்  நாம் ஒவ்வொருவரும் பொறுப்புமிக்கவர்களாக கடமையாற்ற வேண்டிய தேவை உள்ளது.

ஏனைய மாவட்டங்களை விட சகல வளங்களையும் சகல இன மக்களையும் உள்ளடக்கியது அம்பாறை மாவட்டம். எமது நாட்டின் ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோர், பாரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் இந்த வலயத்தின் பணிகளை என்னிடம் கையளித்துள்ளார்கள். அதனை உங்களது பெறுமதிமிக்க அற்பணிப்புடனான சேவைகள் மூலம் நிறைவேற்றி இந்த மக்களுக்கு பணியாற்ற திடசந்தர்ப்பம் பூண்டுள்ளேன். அதனை சரியாக நிறைவேற்ற எண்ணியுள்ளேன்' எனவும் அவர் கூறினார்.

'ஊழல் மற்றும் திருட்டு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவொரு மன்னிப்பும் கிடையாது. அவ்வாறானவர்களுக்காக பரிந்துரைப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகளுக்கு அரச திணைக்களத்தினது 148 – 154 சரத்துக்கு அமைவாக அரச நிதியினைப் பயன்படுத்தும் விதம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக சமுர்த்தி நலனுதவிகள், இதர செயற்பாடுகளின் போதும் செய்யப்படும் ஒவ்வொரு சதத்துக்கும் கணக்காய்வு அதிபதிக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கும் பதில் கூற வேண்டியவர்களாக இருக்க வேண்டும்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X