2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

அஷ்ரப் போல சேவை செய்ய ஆசைபடுகிறோம்: பி.எச்.பியசேன

Super User   / 2014 ஏப்ரல் 10 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஜே.எம்.ஹனீபா,ஏ.எஸ்.எம்.முஜாஹித்

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு மகத்தான சேவை செய்தவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப். அவரை போன்று சேவை செய்வதற்கு நாங்கள் ஆசைப்படுகின்றோம். சிங்கள பகுதியின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு முதலில் பேசுவது  மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களை பற்றிதான் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ்  தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகங்கள் இணைந்து வியாழக்கிழமை (10) ஏற்பாடு செய்த திவிநெகும புத்தாண்டு சந்தையை, மத்தியமுகாம் பாமடியில்  ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தற்போதைய காலம் அபிவிருத்தியை நோக்கி செல்கின்றமையால் குறிப்பாக தமிழ் மக்கள் அபிவிருத்தில் இணைந்து கொள்ள வேண்டும். அபிவிருத்தியை விரும்பாத தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் பயங்கரவாத அரசியல் பரவிக்காணப்படுகிறது.

தமிழ் மக்களை அபிவிருத்தி அரசியலில் இணையவோ, அபிவிருத்தி செய்வதற்கோ  அங்கிருக்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைத்துவங்கள் விடுவதில்லை. அந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சகோதரர்களிடம் இருந்து உயர்வு, வாழ்வியல், வியாபாரம், முன்னேற்றம், அபிவிருத்தி, கல்வி போன்றவற்றை படிக்க வேண்டிய கட்டாய தேவை தமிழ் மக்களிடம் இருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆசியாவில் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்ற  மும்முரமாக உழைத்துக் கொண்டு இருக்கின்றார். எமது தமிழ் மக்களை தவறான தலைமைத்துவங்கள் தவறான பாதையில் அழைத்து செல்லுகின்றன. இதனை மாற்றியமைக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தின் காரையோரப் பிரதேசத்தில் திருக்கோயிலில் மட்டும்தான் ஞாயிற்றுக்கிழமை என ஒரு வாரச்சந்தை இருக்கின்றது. தமிழ் இனத்தின் சாபக்கேடு என்னவென்றால், 'அபிவிருத்தி செய்பவர்களை பிடிக்காது' என அவர் மேலும்  தெரிவித்தார்.

இச்சந்தையில் திவிநெகும திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட அதிகளவான உள்ளுர் உற்பத்தி பொருட்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டதுடன், பிரதேச பொது மக்கள் புத்தாண்டிற்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவும் செய்தனர்.

இதேவேளை சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கான புத்தாண்டு கொடுக்கல் - வாங்கல்கள் சமுர்த்தி வங்கிகளினுடாக ஆராம்பித்து வைக்கப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் இடம்பெற்ற திவிநெகும புத்தாண்டு சந்தை ஆரம்ப நிகழ்வுக்கு, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன,  நாவிதன்வெளி பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.ஆனந்தன், மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.தஜாப்தீன், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--