2021 மே 06, வியாழக்கிழமை

'மு.காவை சேர்ந்த ஒருவரை கி.மா. முதலமைச்சராக நியமிக்கவுள்ளோம்'

Thipaan   / 2015 ஜனவரி 31 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார், ஏ.ஜே.எம்.ஹனீபா

இன்னும் ஒரு சில தினங்களுக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சரை நியமிக்கவுள்ளதுடன் எங்களோடு சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு அனைத்து கட்சிகளுக்கு திறந்த மனதோடு அழைப்பு விடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சம்மாந்துறை வேர்கள், விழுதுகள் சமூகநல ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அஷ்ஷஹீத் எம்.வை.எம். மன்சூரின் 25வது வருட நினைவுப்பேருரையும் கத்தமுல் குர்ஆன் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

கவிஞர் மன்சூர் ஏ.காதர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தம் உரையாற்றுகையில்,

2012ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் உடன்பாடொன்று மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில்  கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை தொடர்வதற்கான அனுமதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கியுள்ளனர். அதன்படி முதலமைச்சரை மிக விரைவில் நியமிக்கவுள்ளோம்.

எந்த நோக்கத்துக்காக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியினை தோற்கடித்து மைத்திரி ஆட்சியை அமைத்தோமே அந்த நல்லாட்சியினை ஏற்படுத்துவதற்கான தேசிய அரசாங்க கோட்பாட்டை மூலம் கிழக்கு மாகாணத்தில் நிறுவிக்காட்டுவதற்கான ஒருவாய்பை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.

அதற்காக நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சேர்ந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கின்றோம்.

இதன் மூலம் முழுநாட்டுக்கும் ஆதர்சியமான ஓர் அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்துகின்ற ஆட்சியை, அடுத்து வரும் இரண்டரை வருடங்களுக்கு நாம் எல்லோரும் சேர்ந்து கிழக்கு மாகாணத்தில் செய்வோம்.

இந்நிகழ்வில், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் இராஜங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸன்அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், எம்.ஐ.எம். மன்சூர் கட்சியின் முக்கியஸ்தர்கள், அஷ்ஷஹீத் எம்.வை.எம். மன்சூரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .