2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Princiya Dixci   / 2021 ஜனவரி 13 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, ஏ.எல்.எம்.ஷினாஸ், எம்.எஸ்.எம். ஹனீபா, வி.சுகிர்தகுமார், ஏ.எஸ்.எம் முஜாஹித்

கடந்த 06  நாட்களாக பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டிருப்பதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், சம்மாந்துறை, காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சில இடங்களில் பொதுமக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சாய்ந்தமருது, பொலிவேரியன் சுனாமி குடியிருப்புக் கிராமம் மற்றும் மருதமுனை பிரான்ஸ் சிற்றி சுனாமி குடியிருப்புக் கிராமம் போன்றவை வெள்ளத்தில் மூழ்கிக்காணப்படுகிறன.

அத்துடன், கிட்டங்கிப்பால வீதி மற்றும் கல்முனை- அம்பாறை நெடுஞ்சாலையிலுள்ள காரைதீவு, மாவடிப்பள்ளி சிறிய பாலம் என்பவற்றுக்கு மேலாக வெள்ள நீர் பாய்ந்தோடுவதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் வீதிகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மேலும், அறுடைக்குத் தயார் நிலையிலிருந்த விவசாய நெற்காணிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் அறுவடை பாதிக்கப்பட்டு, நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த வெள்ள நிலைமையை கருத்தில்கொண்டு, கரையோரப் பிரதேசங்களிலுள்ள பல முகத்துவாரங்கள் நேற்று (13) திறப்பட்டுள்ளன. 

கடல் கொந்தளிப்பு காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன், மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .