2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

யாழில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை: பிரதீபராஜா எச்சரிக்கை

Editorial   / 2026 ஜனவரி 07 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதன் தாக்கம் யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு  பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை புதன்கிழமை (07) முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில்  

உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர உள்ளது. இது மணிக்கு 9 கிலோ மீற்றர் வேகத்தில் நகர உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வு மண்டலமாக அமைகின்றது.

ஆனாலும் கடந்து சென்ற தாழ்வு மண்டலங்கள் விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இதன் நகர்வும் பாதை கடல் பகுதியாக இருந்தாலும். வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது. அத்துடன் மிக குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 8,9,10 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

அத்துடன் 9,10 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள உள்ளது. இதன் தாக்கம் டிட்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க முடிகிறது.

அத்துடன் இந்த பாதிப்பால் விவசாயிகள் பாரிய பயிர் அழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்த அவர் துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது என்றும் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

அதே நேரம் ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .