2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

’மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை’

Princiya Dixci   / 2021 ஜனவரி 13 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

யுத்தத்தின் பின் மக்களை அரவணைக்கும் எண்ணம் இல்லை என்பது ஜனாதிபதியின் பேச்சில் தெரிகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  தவராஜா கலையரசன் தெரிவித்தார்.

அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்த பின்னர் கருத்துரைக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் இருக்கும் அரசியல் தலைவர்கள், மக்களை அச்சமூட்டும் வகையில் அரசியல் செய்து வருகின்றனர். குறிப்பாக, மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மோசமான இனவாத அடிப்படை வார்த்தைகள், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, மோசமான சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்துகிறது. 

“தொடர்ச்சியாக தமிழ் மக்களை அடக்கி ஆள என்ற வகையில்  அவர்களது செயற்பாடுகள் இருக்கின்றன. எந்தவொரு விடயத்தை எடுத்துப் பார்த்தாலும் அடக்கியாண்டு, சுதந்திரம் அற்ற நிலையில் இருக்க வேண்டும் என அவர்களது செயற்பாடுகள் இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும்.

“இந்த நாட்டில் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றோம் . அவர்களது பேச்சில் சிறுபான்மை சமூகம் வாழ முடியாது என்றதொரு நிலையாக இருக்கின்றது. குறிப்பாக கிழக்கில் அதிகரித்துள்ளது.

“நாட்டின் ஜனாதிபதி யுத்தத்தை உதாரணம் காட்டி, மிக மோசமாக உரையாற்றியிருக்கின்றார். யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏனைய மக்களையும் அரவணைத்து நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும். இது நாட்டை ஆளுகின்ற தலைவர்களது தலையாய கடமையாகும். மாறாக எம்மை மாற்று பார்வை கொண்டு பார்க்கும் நிலை மாற வேண்டும்.

“ஏனைய இனங்களை போன்று தமிழ் மக்களும் வாழ வேண்டும் என்றவகையில் எமது அரசியல் பணி முன்னெடுக்கப்படும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .