2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

‘மழை’யில் நனைய நினைத்தால் நடுத்தெருவில் நிற்பது நிச்சயம்

A.Kanagaraj   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘மழை’யில் நனைய நினைத்தால் நடுத்தெருவில் நிற்பது நிச்சயம்

ஒவ்வொரு விடயங்களிலும் ஏதாவது தில்லுமுல்லுச் செய்து, எப்படியாவது வாழ்ந்துவிடவேண்டுமென நினைக்கின்ற சிலர் இருக்கையில், இப்படிதான் வாழவேண்டுமெனத் திட்டங்களைத் தீட்டி, அந்தப் பாதையில் பயணிப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

சின்னச்சின்ன விடயங்களில் கூட, பலரும் ஏமாந்துவிடுகின்றனர். கொரோனா அலைக்குப் பின்னர், ‘ஏமாற்றுதல்’ நாளாந்தம் அதிகரித்தே செல்கின்றது. “ஏமாந்துவிட்டோம்” என வெட்கத்தை விட்டு, வெளிப்படையாகக் கூறுபவர்களும் இருக்கின்றனர். சிலர், ஒன்றுமே நடக்காததைப் போல இருந்துவிடுவர்.

ஏமாந்தவர் அமைதியாய் இருப்பதுதான், ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு வசதியாக  அமைந்துவிடுகிறது. இல்லையேல், இருக்கின்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி, ஏமாற்றுப் பேர்வழிகளை வலைக்குள் இழுத்தெடுத்து, சிக்கவைத்துக்கொள்வது ஒன்றும் முடியாததல்ல.

பொதுப் போக்குவரத்தில் பயணிப்போர், தங்களுடைய பெறுமதியான ஆவணங்களையும் பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களையும் பறிகொடுத்துவிட்டிருக்கின்றனர். ஒருவரது பதற்றம், அவசரம், ஆதங்கம், தனிமை உள்ளிட்டவற்றை வைத்தே, ‘சுருட்டு’வதற்கான திட்டங்களை ஏமாற்றுப்பேர்வழிகளால் வகுக்கப்படுகிறது.

ஆண், பெண் என, இரு பாலார்களிலும் பலர், பக்கத்தில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளால் ஏமாற்றப்பட்டுவிடுகின்றனர். மயக்கமடையச் செய்யும் வஸ்துகள் கலந்த உணவுகளை உட்கொண்டோ, பானங்களை அருந்தியோ, கண்ணயர்ந்து பலவற்றையும் பறிகொடுத்து, இறுதியில் விழிபிதுங்கி நிற்பர்.

இன்னும் சிலர், வங்கிகளின் தன்னியக்க அட்டைகளின் இரகசிய குறியீடுகளை, பணப்பைகளிலேயே எழுதிவைத்து, இருக்கும் மிச்சம் சொச்சத்தை இழந்துவிடுகின்றனர். ‘ஏமாரும் பேர்வழிகளை’ இலகுவாக இனங்கண்டுகொள்ளும் ‘ஏமாற்றுப் பேர்வழிகள்’  மிக இலாவகமாக சுருட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.

அச்சுறுத்திக் கொள்ளையடித்தல் என்பதற்கப்பால், ‘இலாவகமாகச் சுருட்டிக்கொள்ளல்’ எனும் சூழ்ச்சியின் கீழ், நமது கண், காதுகளையே நம்பமுடியாத அளவில், வியக்குமளவுக்குப் பரிசு மழைகளைப் பொழிந்து, ஒருசில நிமிடங்களில் பெருந்தொகையை சுருட்டிக்கொள்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆகையால், எதிலும், எப்போதும் மிகக் கவனமாக இருப்பதே, சகலருக்கும் சாலச் சிறந்தது. அன்றாடம் ஜீவியம் நடத்தவேண்டும் என்பதற்காக, சிலர், கையேந்தி நிற்பதைக் காணலாம். ஆனால், அடுத்தவரின் உழைப்பை அப்படியே இலாவகமாக சுருட்டிக்கொண்டு, சுகபோகமாக வாழும் குழுக்களும் இருக்கத்தான் செய்கின்றன.

பொது இடங்களில் பயணிக்கும் போதும், வங்கிகளுக்குச் செல்லும் முன்னரும் சென்று திரும்பும் போதும், தங்களைச் சுற்றி நடப்பவை தொடர்பில் அவதானமாக இருந்தாலே, இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழமுடியும். இல்லையேல் இருப்பதையும் இழந்துவிட்டு, திக்குத்தெரியாது தவிக்கவேண்டிய நிலைமைதான் ஏற்படும்.

ஒவ்வொருவருடைய திறன்பேசி இலக்கங்களும் குறுந்தகவல்களாய் வரும் பரிசு மழை தொடர்பில் விழிப்பாக இருக்கவேண்டும். அம்மழையில் நனைய நினைத்தால், இருப்பதையும் இழந்து நடுத்தெருவிலேயே நிற்கவேண்டும். அவ்வாறான அனுபவம் பலருக்கும் இருக்கும் என்பதால், உத்தியோகபூர்வமற்ற பரிசு  மழைகளில் நனைவதற்கு நினைக்காமல் இருப்பதே உசித்தம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .