2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

“சர்வதேசத் தரம்வாய்ந்த யோகா நிலையங்கள் இலங்கையில் உருவாக்கப்பட வேண்டும்”

Editorial   / 2019 நவம்பர் 15 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

சர்வதேசத் தரம் வாய்ந்த யோகா சான்றிதழை வைத்திருக்கும் யோகா ஆசிரியர்களை, பாடசாலைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை, இலங்கை அரசாங்க மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் யோகா என்ற இந்தத் துறையானது, இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு துறையாகக் காணப்படுகிறது. ஒரு மில்லியன் டொலர் வருவாய் உள்ள யோகா நிலையங்கள், உலகம் முழுவதும் உள்ளன.   

ஆனால், இலங்கையிலுள்ள யோகா நிலையங்கள், பொருளாதார வசதியின்றியே இயங்கி வருகின்றன. சர்வதேசத் தரம்வாய்ந்த யோகா நிலையங்களாக அவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். இலங்கையிலுள்ள யோகா நிலையங்களை ஊக்குவிப்பதுடன், யோகாவின் அவசியம் தொடர்பிலான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின், யோகா பயின்ற ஒருவர் மாதாந்தம் குறைந்தது 50,000 வரை உழைக்கலாம்” என்று சர்வதேசப் புகழ்பெற்ற யோகா ஆசிரியர் இராசக்கோன் சுதாஸ் தெரிவித்தார்.   

SKY DIVINE ARTS நிறுவனத்தின் இயக்குநரான இவர், யோகாவில் B.SC பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளதுடன், பாபாஜியின் கிரியா ஹத யோகத்தை, சுமார் 10 வருடங்களுக்கும் மேலாகக் கற்பித்து வருகிறார்.   

‘ஸ்ரீஆட்மன்’ என்ற புனைப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இவர், பாபாஜி கிரியா யோகத்தை குரு.ந.ஆறுமுகம் ஐயாவிடம் பயின்றுள்ளார். இவர், சுவாமி சங்கரானந்தாவின் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இலங்கையில் மட்டுமன்றி, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும், வெளிநாட்டவர்களுக்கும் இவர் யோகா பயிற்சியை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யோகா மட்டுமன்றி, தியானம், ரெய்கி (ஜப்பானியர்களின் தியான வடிவம். உள்ளங்கையால் நோய்களைக் குணப்படுத்தும் முறைமை) உள்ளிட்ட ஆன்மீகம் சார்ந்த பல விடயங்களைக் கற்றுக்கொடுத்து வருகிறார். இவரிடம் யோகா, ரெய்கியைப் பயின்ற பல மாணவர்கள், உலகம் முழுவதும் வியாபித்துள்ளனர்.   

அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் இவர், அண்மையில் இலங்கைக்கு வருகைத்தந்திருந்ததுடன், இலங்கையில் ஐந்து நாள் யோகா பயிற்சிப்பட்டறை, இரண்டு நாள் ரெய்கி பயிற்சி, 200 மணித்தியாலங்களைக் கொண்ட ஆசிரியர் பயிற்சி நெறியையும் நடத்தினார். அவர் தமிழ்மிரருக்கு வழங்கிய விசேட செவ்வி பின்வருமாறு .   

கே; யோகாவைப் பற்றி கூறமுடியுமா?

யோகா என்பது, 5,000 வருடங்களுக்கு முன்னர், பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்டது. அவர், தனக்கு முன்பிருந்தவர்கள் வெளிப்படுத்திய யோகா கலையை, கலியுகத்துக்கு ஏற்றாற்போல், கணித வடிவில் வடிமைத்தார்.   

இதன்  காரணமாகவே, பதஞ்சலியை யோகாவின் தந்தை என்று அழைக்கிறோம். அவர் வகுத்த நூலில் இருக்கக்கூடிய சிறப்புத்தன்மையே அதற்குக் காரணம். பதஞ்சலி முனிவர் அருளிச்சென்ற யோகாவில், மதம்சார்ந்த விடயங்களோ ஆன்மீக விடயங்களோ உள்வாங்கப்படவில்லை. முற்றுமுழுதாக உடற்பயிற்சி மட்டுமே உள்ளடங்கியுள்ளது.   

யோகாவில் மொத்தமாக 84 இலட்சம் ஆசனங்கள் இருக்கின்றன. அவை படிப்படியாகக் குறைந்து, 84 ஆயிரமாகவும் பின்னர் 8,400 ஆகவும் குறைவடைந்ததுடன், தற்போதைய யுகத்தில் 84 ஆசனங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.   

84 யோகாசனங்களையும் வெவ்வேறு குருமார்கள், தங்களதுத் தனித்துவத்தைப் பேணும் நோக்கில் வெவ்வேறு முறைகளில் கற்பித்துக்கொடுக்கின்றனர்.   

கே பாபாஜியின் கிரியா ஹத யோகாவைப்  பற்றிக் கூற முடியுமா?

கிரியா பாபாஜியின் வழியில் வந்ததே, கிரியா ஹத யோகா. கிரியா பாபாஜி 2,000 வருடங்களுக்கு முன்னர், இந்தியா - சிதரம்பத்திலுள்ள பரங்கிப்பட்டி என்றக் கிராமத்தில் பிறந்து, பின்னர் குருவாகினார். அவரே கலியுகத்துக்கு ஏற்றாற்போன்று, கிரியா யோகாவை உருவாக்கினார்.

அவர் 84 இலட்சம் யோகாசனங்களில், 18 ஆசனங்களை மட்டும் பிரித்தெடுத்து, கலியுகத்துக்குத் தேவையான வகையில் வடிவமைத்தார்.   

அதவாது, ஒரு மனிதனின் உடலிலுள்ள குண்டலினியின் வளர்ச்சிக்கு ஏற்ப, அவர் 18 ஆசனங்களையும் ஒழுங்குப்படுத்தியுள்ளார். 18 ஆசனங்களில் 14 ஆசனங்கள், உடம்பிலுள்ள ஏழு சக்கரங்களை செயற்படுத்துவதற்கான ஆசனங்களாக அமைந்துள்ளன. மீதமுள்ள 4 ஆசனங்கள், உடலை சமநிலைப்படுத்துவதற்கான ஆசனங்களாக அமைந்துள்ளன.   

கிரியா யோகா, சோடி சோடியாக செய்யப்படுகிறது. ஓர் ஆசனத்தை செய்யும்போது, அதற்கு ஒப்பான மற்ற ஆசனத்தையும் செய்கிறோம். இந்த 18 ஆசனங்களையும் ஒருவர் செய்வாரெனில், அவர் ஆரோக்கியமான உடலைப் பெறுவார்.   

18 ஆசனங்களையும் செய்யும்போது, உடலிலுள்ள நரம்புகள் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கத் தொடங்கும் என்பதால், பிரபஞ்ச சக்தி உள்ளிட்ட அனைத்துச் சக்திகளையும் பெறமுடியும். இந்த 18 ஆசனங்களையும் ஒருவர் செய்வாரெனில் அவருக்கு வேறு எந்த ஆசனமும் தேவையில்லை.   

18 ஆசனங்களும் உடற்சக்தியோடு தொடர்புடையவை. நான் எனது வாழ்வில் மிகக் கடினமான ஆசனங்கள் எவற்றையும் செய்யவில்லை. ஆனால் கடினமான ஆசனங்களை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன். ஏனெனில், இந்த 18 ஆசனங்களுக்கூடாகக் கிடைத்த சக்தியே, ஏனைய ஆசனங்களைச் செய்வதற்கு வழிவகுத்தது.   

கே; அவுஸ்திரேலியா நாட்டில் யோகாவுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது?

அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில், அநேகமானவர்கள் யோகாவைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளனர். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலும் யோகா செய்தால், உடலும் உளமும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதாலும், யோகா பயிற்சியை ஆர்வமாக மேற்கொள்கின்றனர்.   

வெளிநாடுகளில் யோகா என்பது, கோவிலுக்குச் சமமதானதாகவே மதிக்கப்படுகிறது. நாங்கள் கோவிலுக்குச் சென்று எதனைத் தேடுகின்றோமோ, அதனை அவர்கள் யோகா பயிற்சி நிலையங்களில் தேடுகின்றனர்.   

வெளிநாடுகளில் யோகா நிலையங்கள் வெவ்வேறு விதமாக வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றன. மன அமைதிக்கான ஒரு வழியாகவும் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகவும், உடற்பயிற்சியாகவும் வெளிநாடுகளில் யோகா கற்றுக்கொடுக்கப்படுகிறது.   

இலங்கையைப் போன்றல்லாது, யோகாவை வெளிநாடுகளில் வியாபாரமாகவும் செய்து முன்னேறலாம். இலங்கையைப் பொறுத்தவரை, யோகாவை தொழிலாகச் செய்யும் நபர், வாழ்வில் முன்னேற்றகரமான நிலையை அடைவதற்கு நீண்டகாலம் எடுக்கிறது. ஆனால், வெளிநாடுகளில் பலர் யோகாவை ஒரு தொழிலாகவே செய்துவருகின்றனர்.   

கே; பாடசாலை மாணவர்களுக்கு, எத்தகைய ஆசனங்களைக் கற்றுக்கொடுக்கலாம்?

உலகளவில் பொதுவாக இருக்கக்கூடிய சூரிய நமஸ்காரத்தை மட்டும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாலே போதுமானது. சுமார் 15 நிமிடங்கள் செய்யக்கூடிய இந்த யோகாசானத்தை, தினமும் செய்துவர மாணவர்கள் நல்லநிலைக்குச் செல்வர். அதற்கு, அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகம் முன்வர வேண்டும்.   

கே;  உங்களது யோகா பயிற்சி  நிலையத்தால் எத்தனை ஆசிரியர்களை உருவாக்கியுள்ளனர். அவர்களால் பாடசாலை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முடியுமா?

என்னுடைய யோகா நிறுவனத்தில் பயிற்சிபெற்ற பல மாணவர்கள், யோகா ஆசிரியர்களாக வளம்வந்துக் கொண்டிருக்கின்றனர்.   

மேலும் நான்கு பேர், BSC இன் யோகா ஆசிரியர் பயிற்சியை முடிப்பதற்காக, இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். நான் 2005ஆம் ஆண்டிலிருந்து யோகா ஆசிரியர் பயிற்சியை வழங்கி வருகின்றேன். 2015ஆம் ஆண்டே அமெரிக்க டிப்ளோமா இன் யோகாவைக் கற்பிப்பதற்கு ஆரம்பித்தேன்.   

கே; ‘அமெரிக்க டிப்ளோமா இன்’ யோகாவைப் பற்றி கூறமுடியுமா?

யோகா என்பது மதம், கலாசாரம் என்பதைத் தாண்டி உடல் ஆரோக்கியத்துக்காமன ஒரு நுட்பமாக உலகளவில் வளர்ச்சியடைந்துவிட்டது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாரதப் பிரதமரானதன் பின்னர், ‘சர்வதேச யோகா தினம்’ என்ற ஒன்றை ஆரம்பித்தார். அதன் பின்னர், உலகளவில் இன்று, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள், யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.   

யோகாவை ஒரு நிறுவனத்துக்குக் கீழ் கொண்டுவருவதற்காக, 1992ஆம் ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த ஒரு குருவால் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே ‘யோகா எலைன்ஸ்’ அந்த அமைப்பு என்ன செய்கின்றது என்றால், யோகா கற்கைநெறியை ஒழுங்குப்படுத்தும் வேலையைச் செய்கிறது.   

யோகா ஆசிரியர்கள், யோகாவை எவ்வளவு மணித்தியாலம் படித்தால் டிப்ளோமா, எட்வான்ஸ் டிப்ளோமா என்ற வகைப்படுத்தலை இந்த நிறுவனம் மேற்கொள்கின்றது. யோகா நிலையங்களை நடத்திச் செல்பவர்களெனில், அவர்களது உடல் எவ்வாறு இருக்க வேண்டும், யோகா பள்ளி எவ்வாறு இருக்க வேண்டும், யோகா ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற ஒழுங்குப்படுத்தல்களை இந்நிறுவனம் மேற்கொள்கிறது.   

அமெரிக்க யோகா எலைன்ஸில், ஐந்து விதமான கற்கைநெறிகளுக்கு அனுமதி வழங்குகின்றனர்.   

அதில் முதலாவது, ‘டிப்ளோமா இன் யோகா’. அதாவது, 200 மணித்தியாலங்களைக் கொண்ட ஆசிரியர் பயிற்சிப்பட்டறை. இரண்டாவது, 300 மணித்தியாலங்கள் கொண்ட ஆசிரியர் பயிற்சிப்பட்டறை. மூன்றாவது, 500 மணித்தியாலங்கள் கொண்ட ஆசிரியர் பயிற்சிப்பட்டறை, சிறுவர்களுக்கான யோகா ஆசிரியர்களை உருவாக்குவதற்கான யோகா பயிற்சிப்பட்டறை, ஐந்தாவது உலகில் மிக முக்கியத் தேவையாக உள்ள கர்ப்பிணிகளுக்குக் கற்பித்துக்கொடுக்கின்ற யோகா ஆசிரியர் பயிற்சிப்பட்டறை. இந்தப் பயற்சியில், கர்ப்பம் தரித்த பெண், பிரசவம் அடைந்த பெண் என இருவேறு பிரிவுகளாகப் பிரித்து, பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.   

தற்போதைய உலகில், கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சி மிக முக்கியமானதாகக் காணப்படுகிறது. ஏனெனில், தற்போது பிறக்கும் குழந்தைகள் உடல் வளர்ச்சிக் குறைந்தவர்களாகக் காணப்படுவது அதிகரித்துள்ளது. இதற்கு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தமே முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான பயிற்சிகள் இதில் வழங்கப்படுகின்றன.

இலங்கையிலும் சர்வதேசத் தரம்வாய்ந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். அந்த நிறுவனத்தின் கீழ் பயிற்சிபெற்றதற்கான சான்றிதழை வைத்திருக்கும் ஒரு யோகா ஆசிரியர், குறைந்தது 50,000 ரூபாய் சம்பளத்துடன் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.   

என்னிடம் படித்த சகோதரமொழியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், மாலைத்தீவில் தொழில்புரிகின்றார். அவர் தற்போது 150,000 ரூபாய் வரையில் சம்பளம் பெறுகிறார். அவர் வந்துச்செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தங்குமிடவசதியும் இலவசம்.   

நான் 2015 இலிருந்து 2019 வரை, மூன்று யோகா ஆசிரியர் பயிற்சிகளை மேற்கொண்டு, 40 ஆசிரியர் மாணவர்களை உருவாக்கியுள்ளேன். பாடசாலை மாணவர்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்பதே இலட்சியமாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.   

இம்முறையும் ஏழு மாணவர்கள், 200 மணித்தியாலங்களைக் கொண்ட ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக்கொண்டனர். இலங்கையில் ஒவ்வொரு வருடமும், அமெரிக்க எலைன்ஸ் நிறுவனத்தின் கீழ் யோகா ஆசிரியர் பயிற்சி நடத்தப்படுகிறது. வெள்ளவத்தை, வத்தளையில் இந்தப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் இந்தப் பயிற்சிக்காக ஆகக்குறைந்தக் கட்டணமாக 5 இலட்சம் ரூபாய் வரை அறவிடுகின்றனர். ஆனால் இலங்கையில், 1 இலட்சம் ரூபாய் முதல் இரண்டு இலட்சம் ரூபாய் வரையிலேயே அறவிடப்படுகிறது.   

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் இந்தப் பயிற்சியை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பயிற்சிக்கூடாகக் கிடைக்கும் சான்றிதழை வைத்து திறமையிருந்தால், உலகம்பூராகவும் சென்று வரலாம்.   

எனவே, சர்வதேசத் தரம் வாய்ந்த சான்றிதழை வைத்திருக்கும் யோகா ஆசிரியர்களை, பாடசாலைக் கல்வித்திட்டங்களுக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை, இலங்கை அரசாங்கமும் மேற்கொள்ள வேண்டும்.   

வெளிநாடுகளில் இந்தத் துறையானது இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஒரு துறையாகக் காணப்படுகிறது. ஒரு மில்லியன் டொலர் வருவாய் உள்ள யோகா நிலையங்கள், உலகம் முழுவதும் உள்ளன. குறிப்பாக, இலங்கையில் யுத்தம் முடிந்ததன் பிறகு, காலியிலிருந்து அறுகம்பே வரையில், தினமும் 500 அளவிலான யோகா பயிற்சிகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தினமும் நடத்துகின்றனர்.  ஒரு நாளைக்கு 5,000 வரையிலான வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகைத்தருகின்றனர். அவர்களில் 500 பேர்வரையில் யோகாவுக்காகவே இலங்கைக்கு வருகின்றனர்.   

அவர்கள் யோகாவுக்காக 5,000 முதல் 10,000 வரையில் செலவழிக்கின்றனர். ஆனால், எங்களால் 500 டொலரைக் கொடுத்து யோகாவைக் கற்பதற்கான விழிப்புணர்வு இல்லை. சர்வதேசத் தரம்வாய்ந்த மாணவர்களை உருவாக்குவதற்கு, கல்வி அமைச்சோ, அரசாங்கமோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

இலங்கையிலுள்ள யோகா நிலையங்கள், பொருளாதார வசதியின்றியே இயங்கி வருகின்றன. சர்வதேசத் தரம்வாய்ந்த யோகா நிலையங்களாக அவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இலங்கையிலுள்ள யோகா நிலையங்களை ஊக்குவிப்பதுடன், யோகாவின் அவசியம் தொடர்பிலான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின், குறைந்தது ஒருவர் யோகாவால் 50,000 ரூபாய் வரை உழைக்கலாம். யோகா பயிற்சியை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள், இலங்கையைச் சேர்ந்த துணை யோகா ஆசிரியர் ஒருவரைக் கேட்கின்றனர்.

அந்தத் துணை ஆசிரியருக்கு ஒரு மணித்தியால வகுப்பு எடுப்பதற்காக, 50 டொலரை வழங்குவதற்கும் அவர்கள் தயாராக உள்ளனர். ஆனால் நாங்கள் தூரம், நேரம், சோம்பலைக் கருத்திற்கொண்டு அவ்வாறான வாய்ப்புகளைத் தவறவிடுகின்றோம்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .