2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கனிமொழியிடம் மொழி குறித்து கேட்ட விவகாரம்: இது இந்தியாவா? ’இந்தி’யாவா?

A.K.M. Ramzy   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? 'இந்தி'-யாவா? என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

உரம், ரசாயனம் மற்றும் தனிநபர்களின் விவரங்கள் குறித்த பாதுகாப்பு மசோதா குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க திமுக எம்.பி. கனிமொழி நேற்று (ஆக.9) சென்னையில் இருந்து டெல்லி சென்றார். அப்போது, சென்னை

விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைத் திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

அதில், "சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிஐஎஸ்எப் பெண் அதிகாரி ஒருவர் என்னிடம் கேள்வி எழுப்பினார். 'எனக்கு இந்தி தெரியாது,

ஆதலால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்' என்றேன். அதற்கு அந்த அதிகாரி

'நீங்கள் இந்தியரா?' என்று கேட்டார். இந்தியனாக இருக்க இந்தி அறிந்திருக்க வேண்டும் என்று எப்போது இருந்து இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்"

எனத் தெரிவித்திருந்தார். மேலும், #HindiImposition என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியிருந்தார்.

திமுக எம்.பி. கனிமொழி இந்த விவகாரத்தை ட்விட்டரில் பதிவிட்டதும் சிஐஎஸ்எப் அதிகாரிகள் அவரிடம் விளக்கம் அளித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.

மேலும், சிஐஎஸ்எப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், "சிஐஎஸ்எப் வணக்கத்தைத் தெரிவிக்கிறது. உங்களுக்கு நேர்ந்த அசௌகரியக் குறைவான அனுபவத்தை அறிந்தோம்.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சிஐஎஸ்எப் அதிகாரிகள் யாரும் பயணிகளிடம் மொழி குறித்துக் கேட்பதில்லை" எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.10) தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமான

நிலையப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழி எம்.பி.யைப் பார்த்துக் கேட்டுள்ளார்.

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? 'இந்தி'-யாவா?

பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!" எனப் பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--