2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

‘அரசாங்கத்துக்கு எங்களால் பாதிப்பு வராது’

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு, தங்களால் பாதிப்பேதும் வராது என, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், உறுதியளித்துள்ளார். 

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் அணி, ஓர் அணியாகப் பிரிந்து சென்றது. தற்போது, மற்றைய அணி, பழனிசாமி அணியாகவும் தினகரன் அணியாகவும், இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதனால், ஒரே கட்சியில், மூன்று பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் வைத்து, நேற்றுக் கருத்துத் தெரிவித்த பன்னீர்செல்வம், “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு, எங்களால் எந்தப் பாதிப்பும் வராது” என்று உறுதியளித்தார். 

அவரது இந்தக் கருத்து, பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும், மீண்டும் இணையும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணியினரும், இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில், இதற்கு முன்னரும் ஈடுபட்ட நிலையில், அது வெற்றியளித்திருக்கவில்லை. 

தற்போது, தினகரனை ஒதுக்குவதற்காக, இரண்டு தரப்பினரும் ஒன்றாகச் சேரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தினகரனை, சட்டசபை உறுப்பினர்கள், தொடர்ந்தும் சந்தித்துவரும் நிலையில், தற்போதைய நிலையில், முதலமைச்சர் பழனிசாமிக்கு, 91 உறுப்பினர்களின் ஆதரவும் தினகரனுக்கு 31 உறுப்பினர்களின் ஆதரவும் பன்னீர்செல்வத்துக்கு 12 உறுப்பினர்களின் ஆதரவும் காணப்படுவதாகக் கருதப்படுகிறது. 

இதேவேளை, அ.தி.மு.கவின் சட்டசபை உறுப்பினர்கள் சிலர், தினகரனைச் சந்தித்து, தமது ஆதரவை வெளிப்படுத்திவரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி, மாவட்டரீதியாக, சட்டசபை உறுப்பினர்களைச் சந்தித்து வருகிறார். இதனால், இருதரப்பும், விட்டுக்கொடுக்காமல் செயற்படுவதாகவே கருதப்படுகிறது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X