2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

‘இன்னொரு தாக்குதல் உடனடியாக நடக்கலாம்’

Editorial   / 2017 மே 24 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் மன்செஸ்டரில் நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதத்தினால் ஏற்படும் ஆபத்து நிலையை, உயர்ந்த, இக்கட்டடான நிலையாக ஐக்கிய இராச்சியம் உயர்த்தியுள்ளது. இதனையடுத்து, ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய நிலையங்களில், படைவீரர்கள் தரையிறக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டதுடன், 64 பேர் காயமடைந்திருந்தனர்.    

இந்நிலையில், இன்னொரு தாக்குதல் உடனடியாக நடக்கலாம் எனத் தெரிவித்துள்ள, ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே, சன நெருக்கடி மிகுந்த இசை நிகழ்ச்சி அரங்கில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன், பரந்தளவிலான குழுவொன்று தொடர்புபட்டிருக்கலாம் என்பதால், ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத் தேர்தலுக்கு, இரண்டு வாரத்துக்கும் சற்று அதிகமான காலமே இருக்கின்ற நிலையில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.   

பயங்கரவாத ஆபத்து நிலையைத் தீர்மானிக்கும் சுயாதீன அமைப்பு, 2007ஆம் ஆண்டு ஜூனுக்குப் பின்னர் முதன்முறையாக, ஆபத்து நிலையை, கடுமை என்ற நிலையிலிருந்து இக்கட்டான நிலைக்கு உயர்த்துமாறு பரிந்துரைத்துள்ளது. ஆகவே, தாக்குதலொன்று நடைபெறுவதற்கான உயர்ந்தபட்ச வாய்ப்புகள் காணப்படுவதுடன், இன்னுமொரு தாக்குதல் உடனடியாக நடக்கலாம் என பிரதமர் மே கூறியுள்ளார்.   

இதேவேளை, முக்கியமான நிலையங்களைப் பாதுகாப்பதற்கு பொறுப்பான ஆயுதந்தரித்த பொலிஸ் அதிகாரிகள், ஆயுதப் படைகளின் உறுப்பினர்களால் பிரதியீடு செய்யப்படுவார்கள் என்றும், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளிலும்,  இராணுவப் படை வீரர்கள் தரையிறக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் மே, மேலும் கூறியுள்ளார்.   

இந்நிலையில், விசாரணை தொடரும் நிலையில், பொலிஸாரின் தகவல்களில் இடைவெளி காணப்படுவதன் காரணமாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயங்கரவாத ஆபத்தை இக்கட்டான நிலைக்கு உயர்த்தும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, ஐக்கிய இராச்சியத்தின் விசேட நடவடிக்கைகளுக்கான உதவி ஆணையாளர் மார்க் றொவ்லி தெரிவித்ததுடன், நீண்ட காலத்துக்கு இக்கட்டான நிலை நீடிக்காது எனக் கூறியுள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X