2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'எச்சரிக்கையை உதாசீனம் செய்தது பெல்ஜியம்'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 24 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களில், விமான நிலையத்தில் தாக்குதல்களை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் சகோதரர்களில் ஒருவர் தொடர்பாக, தங்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை, பெல்ஜியம் உதாசீனம் செய்ததாக, துருக்கி அறிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபரைத் தடுத்து வைத்து, அவரை நாட்டிலிருந்து வெளியேற்றியதாகத் தெரிவித்துள்ள துருக்கி, அவர் ஒரு 'வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளி" என்ற எச்சரிக்கையையே விடுத்ததாகத் தெரிவித்துள்ளது.

ப்ரஸல்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் முதலாவது தாக்குதல், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு தற்கொலைத் தாக்குதலே மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதை மேற்கொண்டவர்கள், நஜிம் லாச்ரோவோய், பிராஹிம் எல்-பக்ரோவோய் என இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள துருக்கிய ஜனாதிபதி றெசெப் தய்யிப் ஏர்டோகன், துருக்கியின் அதிகாரிகள், பிராஹிம் எல்-பக்ரோவோயை, சிரிய எல்லைக்கு அருகில் கடந்தாண்டு தடுத்து வைத்திருந்ததாகவும், பின்னர் அவரது கோரிக்கையின் பேரில், அவரை நெதர்லாந்துக்கு நாடு கடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

'அவர் நாடு கடத்தப்பட்டமை தொடர்பாக, அங்காராவிலுள்ள (துருக்கித் தலைநகர்) பெல்ஜியத் தூதரகத்துக்கு, ஜூலை 14, 2015 அன்று அறிவித்தோம். ஆனால், அதன் பின்னர் அவர் சுதந்திரமாக விடுவிக்கப்பட்டார். குறித்த நபர், வெளிநாட்டுப் பயங்கரவாதப் போராளி என்ற எங்களது எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், பயங்கரவாதம் தொடர்பான அவரது தொடர்பை, பெல்ஜிய அதிகாரிகளால் கண்டுபிடித்திருக்க முடியவில்லை" எனத் தெரிவித்தார்.

அவரது கருத்தின் போது, நெதர்லாந்துக்கு நாடு கடத்தப்பட்ட குறித்த நபர், எவ்வாறு பெல்ஜியத்துக்கு அனுப்பப்பட்டார் என்பது தொடர்பான விவரங்களை அவர் வெளியிட்டிருக்கவில்லை.

முன்னர் வெளியிடப்பட்ட தகவல்களின்படி,  பிராஹிம் எல்-பக்ரோவோயின் சகோதரரே, வெளியிடப்பட்ட புகைப்படத்தில் காணப்படும் நபர் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பிராஹிமிமின் சகோதரரான காலிட் எல்-பக்ரோவோய், மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மேற்கொண்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட புகைப்படத்தில் காணப்படும் மூன்றாவது நபரான, வெள்ளை அங்கி அணிந்தவர், கைது செய்யப்பட்டிருக்கலாம் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் இன்னமும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை எனவும், கைது செய்யப்பட்டவர் வேறொருவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல்களில், குறைந்தது 34 பேர் பலியானதோடு, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X