2021 மே 06, வியாழக்கிழமை

சந்தேநபர்களைத் தேடி பிரான்ஸில் தேடுதல்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 16 , பி.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அதில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கருதப்படும் சந்தேகநபர்களைத் தேடி, விசேட தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

பயங்கரவாதத் தாக்குதலுக்கெதிரான விசேட பிரிவுகள், இந்தத் தேடுதல் நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளதுடன், பரிஸ் தாக்குதல் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் 9 பேர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள், கலாஸ், டொலொஸ், பரிஸ், ஜேமொன்ட், கிரெனோபில் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளன.

இதில், டௌலொஸில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், வீடொன்றிலிருந்து வெடிபொருட்களும் பெருமளவிலான பணமும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தார்.

அத்தோடு, இந்தத் தாக்குதலோடு நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 26 வயதான நபரொருவரின் விவரங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சலா அப்டெல்ஸ்லாம் என்ற அந்நபர், புரூஸெல்ஸில் பிறந்தவர் எனவும், சட்டத் துறையினர் தவிர ஏனையோர், இவருடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டாமெனவும் அறிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புட்டதாகக் கருதப்படும் மூன்று சகோதரர்களில், இவரும் ஒருவரெனவும், பெல்ஜியத்தால் பிறப்பிக்கப்பட்ட சர்வதேச கைதுப் பிடியாணை, இவர் மேல் காணப்படுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தாக்குதலைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலையை, 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு, ஜனாதிபதி ஹொலன்டே தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், 12 நாட்களுக்கு அதிகமாக அவசரகால நிலையை அமுல்படுத்த வேண்டுமெனில், நாடாளுமன்றத்தின் அனுமதியை அவர் பெற வேண்டிய நிலை காணப்படுகிறது.

அவ்வாறு 3 மாதங்களுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டால், நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசெம்பர் 11ஆம் திகதிவரை பரிஸில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக் காலத்திலும், அவசரகால நிலை காணப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .