Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 மார்ச் 31 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியான்மாரின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைவியும் அந்நாட்டின் ஜனநாயகப் போராளியுமான ஆங் சாங் சூகிக்கு, அரச ஆலோசகர் எனும் பதவியொன்று வழங்கப்படுவதற்கான முன்மொழிவு, இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பதவி, அதிகாரம்மிக்கதாக அமையுமெனவும் ஏறத்தாழ பிரதமர் பதவி போல இருக்குமெனவும் அறிவிக்கப்படுகிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ ஆட்சிக்கு உள்ளாகியிருந்த மியான்மார், கடந்தாண்டு நவம்பரில் இடம்பெற்ற தேர்தலைத் தொடர்ந்து, ஜனநாயக மாற்றமொன்றுக்கு உட்பட முயன்றுவருகிறது. இதில் ஓர் அங்கமாக, 54 ஆண்டுகளுக்குப் பின், ஜனநாயகரீதியில் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியாக, டின் ஹாயோ, நேற்று தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
மியான்மாரின் அரசியலமைப்பின்படி, வெளிநாட்டவரொருவரைத் திருமணமுடித்து, வெளிநாட்டவரின் குழந்தையைக் கொண்டுள்ள ஆங் சாங் சூகி, ஜனாதிபதியாக மாற முடியாத நிலை காணப்படுவதன் காரணமாகிறது. எனினும், ஜனாதிபதியை விட அதிக பலமுள்ள பதவியைத் தான் வகிப்பாரென, ஆங் சாங் சூகி தெரிவித்து வந்தார்.
இந்நிலையிலேயே, சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவின்படி, நாடாளுமன்றத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கான பொறுப்பு அவருக்குக் காணப்படுவதோடு, தேவைப்படுவதாக எண்ணும் கூட்டங்களைக் கூட்டவும் வரவு-செலவுத்திட்டத்தை உருவாக்கவும் அதிகாரம் வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே, வெளிநாட்டு அலுவல்கள், கல்வி, சக்தி, ஜனாதிபதி அலுவலக அமைச்சர் ஆகிய நான்கு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுள்ள ஆங் சாங் சூகி, பலமான அமைப்பொன்றை அடைந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிதாக உருவாகியுள்ள ஜனநாயக ஆட்சியில், வைத்தியர்கள் தொடக்கம் கவிஞர்கள் வரை இடம்பெற்றுள்ள போதிலும், அரசாட்சிக்கான அனுபவம் குறைந்தவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர். எனவே, ஆங் சாங் சூகியின் அனுபவம், அவர்களுக்கும் முக்கியமானது எனக் கருதப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றத்துக்குப் பின்னரும், நாட்டின் நாடாளுமன்றத்தில் காற்பங்கு ஆசனங்களை இராணுவத்தினரே கொண்டுள்ளதோடு, அமைச்சரவையில் முக்கியமான 3 பதவிகளை, அவர்களே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .