2021 மே 06, வியாழக்கிழமை

சிறுவர் பாலியல் குற்றங்கள்: விசாரிக்கப்படுகிறார் அவுஸ்திரேலியப் பாதிரியார்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 28 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் பிறந்த வத்திக்கானில் திறைசேரியில் பணியாற்றும் பாதிரியாரான கர்தினால் ஜோர்ஜ் பெல், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சிறுவல் பாலியல் குற்றங்கள் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, விக்டோரியா மாநிலப் பொலிஸார் தெரிவித்தனர்.

மெல்பேண் நகரத்திலுள்ள வானொலி நிலையமான 3AWஇன் நிகழ்ச்சியொன்றில் நேற்றைய தினம் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த விக்டோரிய மாநில பொலிஸ் ஆணையாளர் கிரஹாம் அஸ்டன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பெல் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் செய்தியொன்றை வெளியிட்டிருந்த அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 1970களிலிருந்து 1980களிலிருந்து பாலியல் குற்றங்கள் இடம்பெற்றதாகக் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்களையும் வெளியிட்டிருந்தது.

முறைப்பாட்டாளர்கள், சாட்சிகள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகள் எட்டைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த குறித்த நிகழ்ச்சி, பொலிஸாரிடமிருந்து எந்தவிதத் தகவல்களையும் பெற்றிருக்கவில்லையெனத் தெரிவித்திருந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே, பொலிஸ் ஆணையாளரின் பதில் அமைந்துள்ளது.

அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட றோமிலுள்ள பெல்லின் அலுவலகம், அவர் மீது இந்த நிகழ்ச்சியில் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .