2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

’ட்ரம்ப்பின் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்புகளை அவதானித்தேன்’

Editorial   / 2017 மே 24 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில், கடந்தாண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவிலிருந்தவர்களுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான தொடர்புகளை தான் அவதானித்ததாக, மத்திய புலனாய்வு முகவரகத்தின் (சி.ஐ.ஏ) முன்னாள் பணிப்பாளரான ஜோன் பிரென்னன், நேற்று (23) தெரிவித்துள்ளார்.   

இதேவேளை, இவ்வாண்டு ஜனவரியில், ட்ரம்ப், ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரைக்கும், சி.ஐ.ஏ-க்கு தலைமை தாங்கிய பிரென்னன், ஜனாதிபதித் தேர்தலில் தலையிடுவது, ஐக்கிய அமெரிக்காவுடனான உறவுகளைப் பாதிக்கும் என ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புச் சபையின் தலைவரை, கடந்தாண்டு ஓகஸ்டில் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பில், தனிப்பட்ட ரீதியில் தான் எச்சரித்ததாகவும், பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவுக்கான வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.   

எவ்வாறெனினும், ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே, உண்மையாகத் தொடர்பு காணப்பட்டது என, தான் உறுதியாகக் கூறவில்லை என பிரென்னன் கூறியுள்ளார்.   

இருந்தபோதிலும், ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவிலிருந்தவர்களுக்கும் ரஷ்யாவுக்குமிடையே சந்தேகத்துக்கிடமான தொடர்புகள் காணப்பட்டமை தொடர்பில், ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் உயர் மட்டங்களில், கடந்தாண்டு கவலை காணப்பட்டது என பொதுவெளியில் உறுதிப்படுத்தும் முதலாவது சந்தர்ப்பமாக, பிரென்னனின் வாக்குமூலம் அமைந்திருந்தது.   

இந்நிலையில், செனட்டின் ஆயுதந்தரித்த சேவைகளின் செயற்குழுவின் விசாரணையில், தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் டான் கோட்ஸ், தன்னையும் தேசிய பாதுகாப்பு முகவரகத்தின் தலைவரையும், தனது பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையே காணப்பட்ட தொடர்புகள் குறித்து எந்தவித ஆதாரமுமில்லை என பொதுவெளியில் கூறுமாறு, ஜனாதிபதி ட்ரம்ப் கோரியமை தொடர்பான வொஷிங்டன் போஸ்ட் செய்தி தொடர்பான கேள்வியைத் தவிர்த்துள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X