2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

‘டொனால்ட் ட்ரம்ப்புக்கு நிதியளிக்கிறார் புட்டின்’

Shanmugan Murugavel   / 2017 மே 18 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்போது குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்புக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், நிதியளிக்கிறார் என நினைப்பதாக, ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மைத் தலைவர் கெவின் மக்கார்த்தி தெரிவித்திருந்தார் என்பது, வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் 15ஆம் திகதி நடைபெற்ற, குடியரசுக் கட்சியின் தலைவர்களுடனான சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி ட்ரம்ப், ஜூலை மாதத்திலேயே தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

“இரண்டு பேருக்கு, புட்டின் நிதியளிக்கிறார் என நினைக்கிறேன்: றொராபச்சரும் ட்ரம்ப்பும்” என்று அவர் தெரிவிப்பதன் ஒலிப்பதிவு, வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு கிடைத்துள்ளது. அந்த ஒலிப்பதிவை, அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இதில் றொராபச்சர் என்பவர், கலிபோர்னியாவைச் சேர்ந்த, குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் பிரதிநிதியாவார். இவர், ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர் என்பதால் பிரபலமான ஒருவராவார்.

மக்கார்த்தி அவ்வாறு தெரிவித்த பின்னர், சில தலைவர்கள் சிரித்துள்ளனர். அதற்கு மக்கார்த்தி, “கடவுள் சத்தியமாகச் சொல்கிறேன்” என்று பதிலளிக்கிறார்.

அதன்போது தலையிட்ட பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் போல் றயன், “[இந்த விடயம்] கசிய விடப்படக்கூடாது. அவ்வாறு நடந்தால் தான் (கசிய விடப்படாமல் இருந்தால்), நாங்கள் இங்கு உண்மையான குடும்பம் என்பது தெரியும்” என்று தெரிவிக்கிறார்.

இது தொடர்பாகத் தற்போது கேட்கப்பட்ட போது, போல் றயனின் பேச்சாளர், “அது நடக்கவே இல்லை” என்று தெரிவித்தார். மக்கார்த்தியின் பேச்சாளரும், அவ்வாறு நடக்கவில்லை என்று தெரிவித்ததோடு, மக்கார்த்தி அவ்வாறு தெரிவிப்பார் என்பது பொய்  என்பதோடு அபத்தமானது என்று குறிப்பிட்டார்.

ஆனால், குறிப்பிட்ட கலந்துரையாடலின் ஒலிப்பதிவு வெளியிடப்படும் எனத் தெரிவித்த போது, போல் றயனின் பேச்சாளர், அது நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டது என்று தெரிவித்தார். மக்கார்த்தியும், அது நகைச்சுவை என்றே குறிப்பிட்டார்.
ஆனால், அது நகைச்சுவை என்றால், எதற்காக அது கசியவிடப்படக்கூடாது என்று அந்தக் கூட்டத்தில் வைத்துக் கூறப்பட்டது என்பதுவும், அது தொடர்பாக ஆரம்பத்தில் கருத்துக் கேட்கப்பட்டபோது, எதற்காக “அது நடக்கவேயில்லை” என்று கூறினர் என்பதற்கும், குடியரசுக் கட்சியினர், தெளிவான பதிலை வழங்கவில்லை.

ரஷ்யாவுக்கும் ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவுக்குமிடையில் தொடர்புகள் காணப்பட்டன எனவும், ட்ரம்ப்பையே, அடுத்த ஜனாதிபதியாக்க புட்டின் விரும்பினார் எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் காணப்படுகின்ற நிலையில், தற்போது வெளியான இந்தத் தகவல், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மேலதிக வலுவைச் சேர்க்குமெனக் கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .