2020 நவம்பர் 25, புதன்கிழமை

ட்ரோன் நிபுணர் கொல்லப்பட்டமைக்கு இஸ்ரேலைச் சாடுகிறது ஹமாஸ்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

துனீஷியப் பிரஜையொருவர் துனீஷியாவில் வைத்து கடந்த வாரம் கொல்லப்பட்டமைக்கு, பலஸ்தீன ஹமாஸ் குழு நேற்று(17) இஸ்ரேலைச் சாடியுள்ளது. குறித்த நபரை, தமது ட்ரோன் நிபுணர்களிலொருவராக வர்ணித்த ஹமாஸ், பதில் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

துனீஷியாவின் ஸ்வக்ஸ் நகரத்துக்கு அருகே வைத்து கடந்த வியாழக்கிழமை (15) சுட்டுக் கொல்லப்பட்ட மொஹமட் ஸவாரி, 10 ஆண்டுகளாக தமது குழுவின் அங்கத்தவராக இருந்ததாகவும், தமது ட்ரோன் திட்டத்தை மேற்பார்வை செய்ததாகவும், ஹமாஸின் இராணுவப் பிரிவான குவாஸாம் பிரிகேட்ஸ் தெரிவித்துள்ளது,

எவ்வாறெனினும், காஸா நிலப்பரப்பை ஆளும் ஹமாஸ் தமது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதனையும் முன்வைக்கவில்லை. இந்நிலையில், இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பேச்சாளரொருவரை அணுகியபோது, அவர் கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை.

ஸ்வக்ஸுக்கு அருகிலுள்ள எல் ஐனிலுள்ள தனது வீட்டுக்கு முன்னால், அவரது காரினுள் வைத்தே ஸவாரி சுட்டுக் கொல்லப்பட்டதாக துனீஷிய உள்நாட்டு அமைச்சு தெரிவித்திருந்தது. கொலைக்கு நான்கு வாடகைக் கார்கள் பயன்படுத்தப்பட்டதாக மேலும் தெரிவித்த அமைச்சு, இரண்டு கைத்துப்பாக்கிகளும், அமைதியாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறியிருந்தது.

இந்நிலையில், கொலையுடன் தொடர்புடைய துனீஷியப் பிரஜைகள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டதாக‌ ஸ்வக்ஸிலுள்ள நீதிப் பேச்சாளர்களில் ஒருவரான மௌராட் டௌர்கி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், ஹங்கேரியைக் தளமாகக் கொண்ட துனீஷிய ஊடகவியலாளர் என்பதுடன், அவருடன் சேர்த்து அவரின் படப்பிடிப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, மொராக்கோவைச் சேர்ந்த பெல்ஜிய நாட்டவர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் இருவர் தப்பித்துள்ளனர் என டௌர்கி மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .