Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 13 , மு.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
* மின்னஞ்சல்கள் டுவிட்டரில் வெளியீடு
* ரஷ்ய அரசாங்க உதவி என்று அறிமுகம்
* ‘நான் மிகவும் விரும்புகிறேன்’ எனப் பதிலளிப்பு
* ட்ரம்ப்புக்குத் தெரிந்து தான் சந்திப்பு நடந்ததா?
ஐக்கிய அமெரிக்காவின் கடந்த ஜனாதிபதித் தேர்தலில், அப்போது வேட்பாளராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்பைத் தெரிவுசெய்வதற்கு ரஷ்யா விரும்பியது என்பதோடு, அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது என்பதற்கான ஆதாரங்களை, ஜனாதிபதி ட்ரம்ப்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த சட்டத்தரணியொருவருடனான சந்திப்பை, முன்னாள் ஊடகவியலாளரான றொப் கோல்ட்ஸ்டோன் என்பவர் ஏற்பாடு செய்த மின்னஞ்சல்களே வெளியிடப்பட்டன.
இது தொடர்பான முதலாவது மின்னஞ்சல், கடந்தாண்டு ஜூன் 3ஆம் திகதி, கோல்ட்ஸ்டோனால் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர், “எமின் (பொப்பிசைப் பாடகர் ஒருவர்) சற்று முன்னர் அழைப்பெடுத்து, மிகவும் சுவாரசியம்மிக்க ஒன்று சம்பந்தமாக, உங்களைத் தொடர்புகொள்ளும்படி தெரிவித்தார்.
ரஷ்யாவின் அரச வழக்குத் தொடருநர், அவரது (எமினின்) தந்தை அராஸுடன் இன்று காலையில் சந்தித்தார். ஹிலாரி கிளின்டன் மீது குற்றச்சாட்டு பதிய வைப்பதோடு, அவருடனான தொடர்பை வெளிப்படுத்தும், அதே நேரத்தில் உங்கள் தந்தைக்கு உதவக்கூடிய உத்தியோகபூர்வ ஆவணங்களையும் தகவல்களையும், ட்ரம்ப் பிரசாரக் குழுவுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
“இது வெளிப்படையாகவே, மிகவும் உயர்மட்ட, இரகசியமான தகவல். ஆனால் திரு. ட்ரம்ப்புக்கான ரஷ்யாவினதும் அதன் அரசாங்கத்தினதும் ஆதரவில் ஒரு பகுதி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலளித்த ட்ரம்ப் ஜூனியர், “நன்றி றொப். அதற்கு நன்றி. தற்போது தான் வீதியில் நிற்கிறேன். முதலில் நான் எமினுடன் கதைக்கிறேன். எங்களுக்கு நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல் இருந்தால், அதை நான் மிகவும் விரும்புகிறேன், குறிப்பாக பின்னர் கோடைகாலத்தில். நான் திரும்பிய பின்னர், முதல் வேலையாக அழைப்பொன்றை மேற்கொள்வோமா?” என்று கூறுவதாகக் காட்டப்படுகிறது.
அதன் பின்னர், அந்த உரையாடல் தொடர்ந்து செல்கிறது. அதன் பின்னர், அந்தச் சந்திப்புத் தொடர்பான ஏற்பாடுகள் கலந்துரையாடப்படுவதோடு, அதில், அப்போதைய பிரசாரக்குழுத் தலைவர் போல் மனஃபோர்டும், ட்ரம்ப் ஜூனியரின் மைத்துனரான ஜரெட் குஷ்னரும் பங்குபற்றுவர் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
எனினும், இந்தச் சந்திப்பில், எந்தவிதமான முக்கியமான தகவல்களும் பகிரப்படவில்லை என்ற கருத்தை, ட்ரம்ப் ஜூனியர் மீண்டும் முன்வைத்தார். ஆனால், இந்தச் சந்திப்பின் போது, வேறு செயற்றிட்டங்கள் தொடர்பாகவே கலந்துரையாடச் சென்றதாக, அவர் முன்னர் தெரிவித்தமை, பொய் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், ரஷ்யாவுடன் இணைந்து, ட்ரம்ப்பின் பிரசாரக் குழு செயற்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ள நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப், நேரடியாகச் செயற்பட்டாரா என்பதே கேள்வியாகவுள்ளது.
எனினும், இந்தச் செய்தி வெளியான பின்னர், ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் ஜூனியர், இந்தச் சந்திப்புத் தொடர்பாக, தந்தைக்கு அறிவித்திருக்கவில்லை என்று தெரிவித்தார்.
ரஷ்யாவைச் சேர்ந்த வேறு நபர்களைச் சந்தித்திருக்கிறாரா என்று கேட்டபோது, “ரஷ்யாவிலிருந்து வந்த வேறு நபர்களை, நான் அனேகமாகச் சந்தித்திருக்கிறேன். ஆனால் திட்டமிடப்பட்ட, உத்தியோகபூர்வமான சந்திப்பு என்ற அடிப்படையில் நான் சந்திக்கவில்லை” என்று தெரிவித்தார்.
ஆனால், ரஷ்ய சட்டத்தரணியுடனான சந்திப்பை, ட்ரம்ப் ஜூனியர், ஜூன் 7ஆம் திகதி மாலை 5.16க்கு உறுதிப்படுத்துவதாக, மின்னஞ்சல் குறிப்பிடுகிறது. இரவு 9.15 அளவில் கருத்துத் தெரிவித்த அப்போதைய வேட்பாளரான ட்ரம்ப், தனது போட்டியாளராக இருந்த ஹிலாரி கிளின்டனின் தவறுகள் சம்பந்தமாக, ஊடகச் சந்திப்பொன்றை அடுத்த வாரம் நடத்துவதாக உறுதியளிக்கிறார். எனவே, இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அவருக்கும் தெரிந்திருக்கலாம் என்று, சிலர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
8 minute ago
18 minute ago
31 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
31 minute ago
44 minute ago