2021 ஜனவரி 27, புதன்கிழமை

தென் சூடான் வன்முறையை நிறுத்த எதிர்பார்க்கிறது ஐ.நா

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைய மோதலை நிறுத்துமாறும் வன்முறை பரவுவதை தடுக்குமாறும் தென் சூடானில் போரிலீடுபடும் தரப்புக்களை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கோரியுள்ளது.

கடுமையான வார்த்தைகளில் மோதலை சாடியுள்ள பாதுகாப்புச் சபை, ஐக்கிய நாடுகள் தளம் மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, இதற்கு பதிலாக, மேலதிக அமைதிப் படையினரையும் அழைத்துள்ளதுள்ளது.

எதிரணிக் குழுக்களிடையே கடந்த வெள்ளிக்கிழமை (08) முதல் இடம்பெற்ற தாக்குதல்களில், 272 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சல்வா கிர்ருக்கு ஆதரவான அரசாங்கப் படைகள், தலைநகர் ஜூபாவிலுள்ள தமது நிலைகளைத் தாக்கியதாக உப ஜனாதிபதி ரிக் மச்சாருக்கு விசுவாசமான படைகள் தெரிவித்துள்ளன.

நாடு மீண்டும் போருக்கு திரும்பியுள்ளது என மச்சாரின் பேச்சாளர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்திருந்த நிலமையில், போர் குறித்த அறிக்கைகளை நேர்மையற்றவை என தகவற் துறை அமைச்சர் மைக்கல் மகுயி லுயேத் வர்ணித்துள்ளார்.

சனிக்கிழமை (09) அமைதி மீளக் கொண்டு வரப்பட்டிருந்த போதும், ஞாயிற்றுக்கிழமை (10) காலையில் மீண்டும் மோதல் ஆரம்பித்திருந்தது. இந்நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள், தமது கட்டடத் தொகுதிகளில் அடைக்கலம் புகுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

சீன அமைதி காக்கும் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், சில சீன மற்றும் ருவான்டா துருப்புகள் காயமடைந்ததாகவும் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (10) விடுத்துள்ள அறிக்கையொன்றில், ஜூபாவில் அண்மையில் தோன்றியுள்ள மோதல்களை ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடுமையாக சாடியுள்ளதுடன், ஜூபாவிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்திலிலுள்ள அவசரப் பணிகளில் ஈடுபடாத ஊழியர்களை உடனடியாக வெளியேறுமாறு வொஷிங்டன் உத்தரவிட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .