Shanmugan Murugavel / 2016 ஜூலை 19 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருக்கியில் உள்ள அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பதவியிலிருந்து அகற்றி, இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டமையைத் தொடர்ந்து, அச்சம்பவம் தொடர்பாக 20,000 பேர் இதுவரை சிக்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
பொலிஸ், சிவில் சேவை, நீதித்துறை, இராணுவம் ஆகியவற்றைச் சேர்ந்த 20,000 பேரே, இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களாக அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
எனினும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தவும் தனது எதிரணியினரை அடக்குவதற்கும், ஜனாதிபதி றிசெப் தயீப் ஏர்டோவான் முயல்கிறார் என, அவரது விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தப் புரட்சியில், தனக்கு உயிராபத்துக் காணப்பட்டதாகவும், அதேபோல் புரட்சியாளர்களால் கைப்பற்றப்படும் ஆபத்துக் காணப்பட்டதாகவும், ஏர்டோவான் தெரிவிக்கிறார். தன்னுடைய மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். வெளிநாட்டமைச்சோ, அரசாங்கம் மீதான விமர்சனங்களே, புரட்சிக்கு ஆதரவளித்தமை என்பதன் கீழ் கருதப்படுமென அறிவிக்கிறது. இந்நிலையிலேயே, புரட்சியாளர்களுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
சிரேஷ்ட அதிகாரியொருவரின் கருத்தின்படி, 8,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், இதுவரை தங்கள் பதவிகளிலிருந்து இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். தவிர, வெளிநாட்டமைச்சின் 1,500 அதிகாரிகள் இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, 30க்கும் மேற்பட்ட ஆளுநர்களும் 50க்கும் மேற்பட்ட உயர்நிலை சிவில் அதிகாரிகளும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 3,000க்கும் மேற்பட்ட நீதிபதிகளும் வழக்குத் தொடருநர்களும் இதுவரை பதவியிலிருந்துநீக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 3 மில்லியனுக்கும் மேற்பட்ட சிவில் அதிகாரிகளின் வருடாந்த விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் யில்டிரிமின் கருத்துப்படி, 6,038 படையினர் உட்பட 7,543 பேர் இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற புரட்சிக்கான முயற்சியில், 232 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 32 பேர் மாத்திரமே புரட்சியில் ஈடுபட்டவர்கள் என்பதோடு, மிகுதிப் பேர், பொதுமக்களாகவும் பொலிஸாராகவும் அரசாங்கத்துக்கு விசுவாசமான படையினராகவும் காணப்படுகின்றனர்.
5 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Dec 2025