2020 நவம்பர் 28, சனிக்கிழமை

துருக்கிக்கான ரஷ்யத் தூதுவர் கொல்லப்பட்டார்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்லாஹு அக்பர், அலெப்போ என்று கத்திய துருக்கிப் பொலிஸ் அதிகாரியொருவர், துருக்கிக்கான ரஷ்யத் தூதுவரை நேற்றுச் சுட்டுக் கொன்றுள்ளார். துருக்கித் தலைநகர் அங்காராவிலுள்ள கண்காட்சி நிலையமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்களாலேயே ரஷ்யத் தூதுவரான அன்டேரி கர்லோவ் இறந்துள்ளார்.

ரஷ்ய புகைப்படக் கண்காட்சியொன்றை திறந்து வைத்து உரையாற்ற ஆரம்பித்தபோதே, தூதுவருக்குப் பின்னால் நின்றிருந்த கடமையில் இல்லாத துருக்கிப் பொலிஸ் அதிகாரியொருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அதன்பின்னர், “அல்லாஹு அக்பர்” என்று கத்திய குறித்த நபர், இஸ்லாமியப் புனிதப் போரைப் பற்றி அரபி மொழியில் கதைத்திருந்தார். அதன்பின்னர், “சிரியா பற்றி மறக்க வேண்டாம், அலெப்போ பற்றி மறக்க வேண்டாம்” என துருக்கி மொழியில் தெரிவித்ததுடன், இந்தக் கொடுங்கோலாட்சியில் பங்கேற்ற அனைவரும் பொறுப்புக் கூற வைக்கப்படுவர் என்று கூறியுள்ளார்.

குறித்த நபர் சரணடைய மறுத்த நிலையில், 15 நிமிடங்கள் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, பொலிஸ் நடவடிக்கையொன்றில் துப்பாக்கிதாரி கொல்லப்பட்டதாக துருக்கி அரச ஊடகமான அனடொலு செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது. குறித்த நபர், துருக்கியின் கலகமடக்கும் பொலிஸில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பணியாற்றிய 22 வயதான மெவ்லுட் மேர்ட் அல்டின்டஸ் என துருக்கியின் உள்நாட்டமைச்சர் சுலெய்மான் சொய்லு அடையாளங்கண்டுள்ளார்.

சிரியப் பிரச்சினை பற்றி ரஷ்யா, துருக்கி, ஈரானிய வெளிநாட்டமைச்சர்கள் ரஷ்யாவில் கலந்துரையாடவுள்ள முக்கிய சந்திப்புக்கு முன்னரே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தினைத் தொடர்ந்து, பயங்கரவாதத்துக்கெதிரான போரை அதிகரிக்கவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அங்காராவிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தை அணுகிய நபரொருவர், இலங்கை நேரப்படி இன்று (20) காலை துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டமையைத் தொடர்ந்து, குறித்த தூதரகமும், இஸ்தான்புல், அடானாவிலுள்ள துணைத் தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன. துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் பொலிஸ் காவலில் உள்ளதோடு, குறித்த சம்பவத்தால் காயங்கள் எவையும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .