2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ப்ரஸல்ஸ் தாக்குதல்கள்: இன்னமும் திறக்கப்படாத விமான நிலையம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 30 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான விமான நிலையம், இன்றும் மீளத் திறக்கப்படவில்லை. அது, இன்று  மீளத் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்ட போதிலும், அவ்வாறு செய்யப்படாது என இன்று அறிவிக்கப்பட்டது.

மார்ச் 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஸவென்டெம் விமான நிலையம் மூடப்பட்டே காணப்பட்டது. விமான நிலையத்தில் பகுதியளவு திறக்கப்பட்டு, சோதனைச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, விமான நிலையத்தை இன்று புதன்கிழமை, பகுதியளவிலாவது திறக்க முடியுமா என ஆராயப்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கை, இல்லாது போனது.

விமான நிலையத்தை நடத்துவதற்கான சூழல் இன்னும் ஏற்படவில்லை எனவும், அது தொடர்பான மேலதிக முடிவு, தொடர்ந்துவரும் நாட்களில் எடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு விமான நிலையம் மூடப்பட்டுக் காணப்படுவதன் காரணமாக, நாள்தோறும் சுமார் 5 மில்லியன் யூரோக்கள் இழக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் தினங்களில், பகுதியளவில் விமான நிலையம் திறக்கப்பட்டாலும், முழுமையான நிலையை அடைவதற்கு, பல மாதங்கள் செல்லக்கூடும் என, விமான நிலையத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியான ஆர்னௌட் பெய்ஸ்ட் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட மற்றோர் இடமாக மெட்ரோ ரயில் நிலையம் காணப்பட்ட நிலையில், ப்ரஸல்ஸின் மெட்ரோ ரயில் கட்டமைப்பு, இன்று புதன்கிழமை முதல் ஓரளவு வழமைக்குத் திரும்பியது. தாக்குதல் நடத்தப்பட்ட மேல்பீக் ரயில் நிலையம் மாத்திரம், இன்னமும் வழமைக்குத் திரும்பியிருக்கவில்லை.

இந்தத் தாக்குதல்களின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையை, 32 என என பெல்ஜியம் இன்று அறிவித்தது. முன்னர், 34 என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், முழுமையான உறுதிப்படுத்தல்களைத் தொடர்ந்து, அதை 32 என அறிவிப்பதாகவும், உயிரிழந்த அனைவரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 94 பேர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .