2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

பிரான்ஸில் லொறி மோதியதில் 80க்கு மேற்பட்டோர் பலி

Menaka Mookandi   / 2016 ஜூலை 15 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸின் தெற்கு நகரமான நீஸில், பஸ்டியல் தினம் என அழைக்கப்படும் பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சனத்திரள் மீது லொறியொன்று மோதியதில், சிறுவர்கள் உட்பட , குறைந்தது 80க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

நீஸில் மத்தியதரைக் கடலை நோக்கிய வண்ணம் உள்ள பிரபலமான டெஸ் ஸொங்ளே கடல் முகத்தில் இடம்பெற்ற வாணவேடிக்கையையடுத்தே மேற்படிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த லொறியின் சாரதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், லொறிக்குள் இருந்து துப்பாக்கிகளும் கிரனேட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த தாக்குதலானது பயங்கரவாத தன்மையுடையதாக இருப்பதாக தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி ஃபொஸ்வா ஒலோண்டா, பிரான்ஸ் முழுவதும் அவசரகால நிலையை மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளார்.

கடந்த நவம்பரில் பரிஸில் இடம்பெற்ற தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில், பிரான்ஸ் உயர் உஷார் நிலையில் இருந்திருந்ததுடன், அவசரகால நிலை, எதிர்வரும் 26ஆம் திகதி முடிவடைவதாக இருந்தது.

குறித்த தாக்குதலில் 50 பேரளவில் காயமடைந்துள்ள நிலையில், 18 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த லொறியானது, இரண்டு கிலோமீற்றர் தூரத்துக்கு பலத்த சனத்திரளினுள் பயணித்ததாக அரச வழக்குத் தொடருநர் ஜோ-மிசெக் பேத்ரோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பணயக்கைதிகள் நிலைமைகள் இருந்ததான முன்னைய அறிக்கைகளை மறுத்துள்ள உள்நாட்டு அமைச்சின் பேச்சாளர் பியர்-ஓஹெரி பிறான்டெட், சாரதி தனியாக செயற்பட்டாரா என்று அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

இதுவரையில் எந்தவொரு குழுவும் உரிமை கோராதபோதும்,  பயங்கரவாதத்துக்கெதிரான விசாரணையாளர்களாலேயே விசாரணை கையாளப்படும் என வழக்குத் தொடருநர்கள் தெரிவித்துள்ளனர்.

லொறியில் இருந்தவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே துப்பாக்கி பிரயோக பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக சில அறிக்கைகள் தெரிவித்தபோதும் அவை உறுதிப்படுத்தப்படவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .