2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பேர்லினில் துயரம்;

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியின் தலைநகரான பேர்லினில், பிறைட்ஸ்சேய்ட்பிளட்ஸ் என்ற பகுதியில், சனநடமாட்டம் நிறைந்த பகுதியில், ட்ரக்கொன்று மோதித் தள்ளியதில், குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதோடு, 48 பேர் காயமடைந்தனர். அத்தோடு, மோதிய ட்ரக்குக்குள் இருந்து, உயிரிழந்த நிலையில் இன்னொருவர் மீட்கப்பட்டார். 

சனநடமாட்டம் அதிகமாகக் காணப்பட்ட கிறிஸ்மஸ் சந்தையொன்றின் மீதே, இந்த ட்ரக், மோதித் தள்ளியது. அந்த ட்ரக்கைச் செலுத்தி வந்த நபர், அவ்விடத்திலிருந்து தப்பியோடிய போதிலும், சுமார் 2 கிலோமீற்றர் தூரத்தில் வைத்துப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜேர்மனி நேரப்படி திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 12:30), சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் கூடும் அந்த சந்தைக்குள் புகுந்த ட்ரக், சுமார் 80 மீற்றர்கள், அதற்குள் பயணித்துள்ளது. அவ்வாறு பயணிக்கும் போது சிக்கியவர்களில் சிலர் கொல்லப்பட்டதோடு, மேலும் பலர் காயமடைந்தனர்.  
அந்த ட்ரக், போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரது ட்ரக் எனவும், அதற்குள் சடலமாக மீட்கப்பட்டவரும், போலந்து நாட்டைச் சேர்ந்தவர் என அறிவிக்கப்படுகிறது.

மக்களை இடிக்கும் போது அந்த ட்ரக்கைச் செலுத்தி வந்தவர், பாகிஸ்தானிலிருந்து, இவ்வாண்டு மார்ச் மாதத்தில், அகதிக் கோரிக்கை கேட்டு ஜேர்மனிக்கு வந்தவர் என, பாதுகாப்பு மூலமொன்று தெரிவித்துள்ளது.  இது, தாக்குதல் என்றோ அல்லது பயங்கரவாத நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்றோ, உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்த, அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆனால், பயங்கரவாத நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக இது இருக்கக்கூடும் என்பதற்கான அத்தனை சமிக்ஞைகளும் காணப்படுவதை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .