Shanmugan Murugavel / 2016 மார்ச் 27 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கெதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களோடு காணப்பட்டவராகக் கருதப்படும் நபர் மீதே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர், பைசால் சி என உத்தியோகபூர்வமாக அடையாளங்காணப்பட்டுள்ளதோடு, அவரது உண்மையான பெயர் பைசால் செபோ என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர், கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதோடு, தற்கொலைதாரிகள் இருவரோடு, விமானநிலையத்தின் கண்காணிப்பு கமராக்களில் பதிவுசெய்யப்பட்ட புகைப்படத்தில் காணப்படும் மூன்றாவது நபராக இவர் இருக்கலாம் என்ற கோணத்தில், விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறித்த மூன்றாவது நபரும், தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளவே விமான நிலையத்துக்கு வந்திருந்ததாகவும், ஆனால் அவரது வெடிபொருட்கள் வெடிக்காது போக, அங்கிருந்து தப்பியோடியிருந்ததாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன. இதனையடுத்து, அவரைத் தேடும் பணிகள், முடுக்கிவிடப்பட்டிருந்தன.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில், பைசால் உட்பட மூவருக்கெதிராக இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர், வாடகைக்கார் ஓட்டுநர் எனத் தெரிவித்த பொலிஸார், தற்கொலைதாரிகள் மூவரையும், விமான நிலையத்துக்கு ஓட்டிக்கொண்டு வந்தார் என அடையாளங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட புகைப்படத்தில் காணப்படும் மூன்றாவது நபர் இவரா எனக் கேட்கப்பட்டதோடு, அவராக இவர் இருக்கலாம் என்ற கருதுகோளைக் கொண்டும், விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்தத் தாக்குதல்களுக்கெதிராக மேற்கொள்ளப்படவிருந்த பேரணியொன்று, பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கைவிடப்பட்டது. 'அச்சத்துக்கெதிரான பேரணி" எனப் பெயரிடப்பட்டிருந்த இந்தப் பேரணி, நேற்று இடம்பெறவிருந்தது. எனினும், இவ்வாறு பாரியளவில் ஒன்றுகூடுவதென்பது, புலனாய்வுப் பணிகளில் ஈடுபடும் பொலிஸாரையும் வளங்களையும், இப்பேரணிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்குப் பயன்படுத்த வேண்டியேற்படும் என்பதால், அது கைவிடப்பட்டது.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025