2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மாட்டிறைச்சித் திருவிழா: 3 அங்கத்தவர்களை இடைநிறுத்தியது காங்கிரஸ்

Editorial   / 2017 மே 30 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தைகளில் வைத்து, இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, கேரளாவில் “மாட்டிறைச்சித் திருவிழா” நடத்திய, காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களை, அக்கட்சி இடைநிறுத்தியுள்ளது.

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில், கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இதன் ஓர் அங்கமாக, கடந்த சனிக்கிழமை, “மாட்டிறைச்சித் திருவிழா” நடத்தப்பட்டது. இதன்போது, பொதுமக்களின் முன்னிலையில் வைத்து, பசு அல்லது காளை அல்லது எருது வெட்டப்பட்டு, அவ்விடத்தில் சமைக்கப்பட்டுப் பரிமாறப்பட்டது. வெட்டப்பட்டது பசுவா, காளையா, அல்லது எருதா என்பதில், இன்னமும் குழப்பம் நிலவுகிறது.

இந்த நடவடிக்கை, விலங்கு வதையாகக் கருதப்பட வேண்டுமெனவும் இவ்வாறு பகிரங்கமாக இறைச்சிக்காக வெட்டுவது, விலங்கு வதையை ஊக்குவிப்பதாக அமையுமெனவும், கண்டனங்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து, குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரையும் இடைநிறுத்துவதாக, காங்கிரஸ் நேற்று அறிவித்தது.

முன்னதாக, இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் வெளியிட்ட கட்சியின் உபதலைவர் ராகுல் காந்தி, “கேரளாவில் நேற்று நடந்தது, சிந்தனையற்ற, காட்டுமிராண்டித்தனமான, என்னாலும் காங்கிரஸ் கட்சியாலும் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளத்தகாததுமான நடவடிக்கையாகும். இந்த நிகழ்வை நான், கடுமையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் கருத்தை ஏற்ற சிரேஷ்ட உறுப்பினரான ஷஷி தரூர், “கடுமையாக ஏற்றுக் கொள்கிறேன். கருத்தொன்றைப் புரிய வைப்பதற்காக, அந்த மட்டத்துக்குக் கீழிறங்க வேண்டிய தேவை கிடையாது. எந்தக் காரணத்துக்காகவும் எந்த நிலைமையிலும், மிருகங்கள் மீதான வதை, ஏற்றுக்கொள்ளத்தக்கது அன்று” என்று தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த மூவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், அவர்கள் மீது பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக, கன்னூர் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ரிஜில் மகுல்ட்டி என்ற இளைஞரணிச் செயற்பாட்டாளர், தனது நடவடிக்கைகள் மீது வருத்தம் கிடையாது எனத் தெரிவித்துள்ளதோடு, தங்களது போராட்டத்தின் ஓர் அங்கமாக இதைச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X