2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மேயா, கோர்பினா?

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கெடுப்பு, நாளை (08) நடைபெறவுள்ளது.  

தேர்தலை, இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி அறிவித்தபோது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறும் நடைமுறைகளை ஆரம்பித்ததுடன், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை விட இரட்டை இலக்க முன்னிலையுடன், ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே காணப்பட்டிருந்தார்.   

எனினும், கொதிகளமாக நிலவிய அண்மைய சில வாரங்களில், அரசியலானது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, உள்நாட்டுக் கொள்கை, தான் உள்விவகாரச் செயலாளராக இருந்தபோது மே மேற்கொண்ட நடவடிக்கைகளைச் சுற்றியதாக மாறிய நிலையில், பிரதமர் மேயின் முன்னிலை வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு, ஐக்கிய இராச்சியத்தில், அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களும், தேர்தல் பிரசாரத்தைப் பாதித்திருந்தன.    

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறும் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள், இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியிடமிருந்து ஆதரவாளர்களைப் பெற எதிர்பார்த்த மே, தொழிலாளர் கட்சியிடமிருந்து ஆசனங்களைப் பெற எதிர்பார்த்திருந்தார்.

மே 18ஆம் திகதி வெளியிடப்பட்ட பழமைவாதக் கட்சியின் தேர்தலறிக்கையில், வயதானவர்களைப் பராமரிப்பதற்கான நிதியொதுக்கீட்டைக் குறைக்கப் போவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இது,  தொழிலாளர் கட்சிக்கு வாய்ப்பாக அமைந்தது.   

இந்நிலையில், வயதானவர்களைப் பராமரிப்பதற்கான செலவுகளைக் குறைப்பது, பழமைவாதக்  கட்சியின் முக்கியமான ஆதரவாளர்களைத் தாக்கியிருந்த நிலையில், அந்த அறிவிப்பை,  பிரதமர் மே வாபஸ் பெற்றிருந்தார்.

எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவான சவாலை, பிரதமர் மே எதிர்கொண்டபோதும், இறுதியாக வெளியாகிய கருத்துக்கணிப்புகளில், பழமைவாதக் கட்சியினரே முன்னிலையில் காணப்படுகின்றனர்.

 இறுதியாக வெளியாகிய கருத்துக்கணிப்பொன்றின்படி, தொழிலாலர் கட்சிக்கெதிராக பிரதமர் மே கொண்டிருந்த 20 சதவீத முன்னிலை, தற்போது ஒரு சதவீத முன்னிலையாகக் குறைவடைந்து, 41.6க்கு 40.4 சதவீதமாகக் காணப்படுகின்றது. இருந்தபோதும், பிரதமர் மே, அதிகரித்த பெரும்பான்மையால் வெற்றிபெறுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.  

இதேவேளை, இறுதியாக வெளியாகிய கருத்துக்கணிப்புகளின்படி, பிரதிநிதிகள் சபையில் தேவையான பெரும்பான்மையை விட, 21 ஆசங்கள் குறைவாகவே, பிரதமர் மே பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பழமைவாதக் கட்சி 305 ஆசனங்களையும், தொழிலாளர் கட்சி, 268 ஆசனங்களையும் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .