2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

‘யோகி மீது நடவடிக்கை வேண்டும்’

Editorial   / 2017 மே 30 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தலித்களை அவமானப்படுத்தினார் எனவும், அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தின் மெய்ன்பூர் தீனபட்டி கிராமத்தைச் சேர்ந்த, சுமார் 100 தலித் குடும்பங்களையே, அவர் அவமானப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அந்த மக்கள், முதலமைச்சரைச் சந்திக்கவிருந்த நிலையில், அந்தச் சந்திப்புக்கு முன்னதாக, சவர்க்காரங்களும் ஷம்பூவும் வழங்கப்பட்டு, நன்றாகச் சுத்தஞ்செய்துவிட்டு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரைச் சந்திப்பதற்கு முன்பாக, அவர்கள் அனைவரும், சிறப்பான நறுமணத்துடன் இருக்க வேண்டுமென, அதிகாரிகள் பணிப்புரை விடுத்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

இதன்மூலம், தலித் குழும மக்களை அவர் அவமானப்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வி, “தான் அவமானப்படுத்திய முழுச் சமூகத்துக்கும் முதலமைச்சர், நிபந்தனையற்ற ரீதியிலும் முழுமையாகவும் உடனடியாகவும் மன்னிப்புக் கோர வேண்டும். இரண்டாவதாக, தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் தொடர்பான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ், அவருக்கெதிராக வழக்குப் பதிவுசெய்யப்பட வேண்டும். அவர்கள், அதிர்ச்சிதரும் இந்தத் தீண்டாமையைக் கடைப்பிடித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

5,000 ஆண்டுகளுக்கு மேல், இந்தியாவில் தீண்டாமை காணப்பட்டது என்று தெரிவித்த அவர், இந்தச் சம்பவம், பா.ஜக, ஆர்.எஸ்.எஸ், முதலமைச்சர் ஆகியோரின் உண்மையான முகத்தைக் காண்பித்துள்ளது என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .