2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ரஷ்யாவை விமர்சித்தார் மக்ரோன்

Editorial   / 2017 மே 30 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸின் புதிய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நேற்று இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தை, இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் அதிகரித்த வித்தியாசத்தை வெளிப்படுத்தியது.  

ரஷ்ய ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்பு, வெளிப்படையான கலந்துரையாடல்களைக் கொண்டதாக அமையுமென, ஜனாதிபதி மக்ரோனால் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே, இச்சந்திப்பு இடம்பெற்றது.  

இருவரும் முதலில் சந்தித்தபோது, சம்பிரதாயபூர்வமான கைகுலுக்கல் இடம்பெற்றது. இருவரும் புன்னகைத்தனர்.  

திட்டமிட்டதை விட அதிக நேரமாக, சுமார் ஒரு மணிநேரம் நீடித்த சந்திப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மக்ரோன், இருவரும் வெளிப்படையாகக் கலந்துரையாடியதாகவும் சிரியா, உக்ரேன் போன்ற விடயங்களில், முன்செல்ல வேண்டிய தேவை குறித்து இருவரும் சம்மதித்ததாகவும் தெரிவித்தார். ஆனால், இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், இருவருக்குமிடையிலான வித்தியாசம் வெளிப்பட்டது.  

பிரான்ஸின் ஜனாதிபதித் தேர்தலில் தலையீடுகளை மேற்கொள்வதற்கு, ரஷ்ய அரச நிதியளிக்கப்படும் செய்தி அமைப்புகள் முயன்றன எனவும் தங்களது பிரசாரத்தைக் குழப்புவதற்கு முயன்றன எனவும், மக்ரோனின் பிரசாரக் குழு குற்றஞ்சாட்டியிருந்தது.  

இந்நிலையில், அது தொடர்பாகக் கேள்வியெழுப்பப்பட்ட போது, ஜனாதிபதி புட்டினை அருகில் வைத்துக் கொண்டு பதிலளித்த ஜனாதிபதி மக்ரோன், “பிரசாரக் காலத்தின் போது, ரஷ்யா டுடேயும் ஸ்புட்னிக்கும் (இரண்டும் ரஷ்ய அரச ஊடகங்கள்), தலையிடுவதற்கான முகவர்களாகச் செயற்பட்டன என்பதோடு, என்னைப் பற்றித் தனிப்பட்ட ரீதியிலும் எனது பிரசாரத்தைப் பற்றியும், போலியான செய்தியை, பல தருணங்களில் பரப்பின. தலையிடுவதற்கான, பிரசாரத்துக்கான, பொய்ப் பிரசாரத்துக்கான அங்கங்கள் போன்று அவை செயற்பட்டன” என்று தெரிவித்தார்.  

ஜனாதிபதி மக்ரோனின் குற்றச்சாட்டுகளுக்கு, ஜனாதிபதி புட்டின், நேரடியாகப் பதிலளிக்கவில்லை. ஆனால், மக்ரோனின் பிரசார அணியின் மீதான இணையத் தாக்குதல்களுக்குப் பின்னால், ரஷ்யா காணப்பட்டது என்றவாறு ஊடகவியலாளர் ஒருவர் கூறிய போது, அதை ஜனாதிபதி புட்டின் மறுத்தார்.  

இந்தத் தேர்தலில், கடும்போக்கு வலதுசாரியான மரின் லு பென்னை, ரஷ்யாவும் அதன் ஊடகங்களும் விரும்பின என்று கருதப்படுகிறது. இதன் ஓர் அங்கமாகவே, முதற்சுற்று வாக்கெடுப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்னர், ஜனாதிபதி புட்டினும் லு பென்னும் சந்தித்திருந்தனர்.  
அது குறித்துக் கேட்கப்பட்ட போது, “நாங்கள் எப்போதும், எந்த நபரையும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். லு பென், எங்களைச் சந்திக்குமாறு கோரினால், எதற்காக அவருக்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டும்? எங்கள் நாட்டுடனான உறவுகளை விருத்தி செய்வது குறித்து அவர், பகிரங்கமாகவே கதைத்திருந்த நிலையில், அவரை ஏன் மறுக்க வேண்டும்? அவரை மறுப்பது, விநோதமாக இருந்திருக்கும்” என்று பதிலளித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X