2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

வைகோவைத் திருப்பியனுப்பியமைக்கு திருமாவளவன் கண்டனம்

Editorial   / 2017 ஜூன் 12 , மு.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைகோவை அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பிய மலேஷிய அரசாங்கத்துக்கு, இந்தியா தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நேற்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உரிய விசா அனுமதியைப் பெற்று மலேஷியாவுக்குச் சென்றபோது, விமான நிலையத்தில் வைத்தே, ​அவரைத் திருப்பி அனுப்பியுள்ளனர். தான், இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர், ஓர்  அரசியல் கட்சியின் தலைவர் என்று பல்வேறு ஆதாரங்களைக்  காட்டியும், அவரை ஒரு சிறைக் கைதியைப் போல நடத்தியுள்ளனர். மலேஷிய அரசாங்கத்தின் இந்த அத்துமீறிய செயலை, வன்மையாகக் கண்டிக்கிறோம்.

“வைகோவை, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் அவரால் மலேஷிய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென்றும் பொய்யான காரணங்களைக் கூறி, விமான நிலையத்தில், 16 மணி நேரம் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அவர் எழுந்து போய் உணவு அருந்தக் கூட அனுமதிக்கப்படவில்லை. பட்டினியாகவே வைக்கப்பட்டிருக்கிறார். மலேஷிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, வைகோவுக்கு நேர்ந்த அவமானம் மட்டுமல்ல, தமிழினத்துக்கும் இந்திய நாட்டுக்கும் நேர்ந்த அவமானமே ஆகும்.

மலேஷிய அரசாங்கம் இப்படி நடந்து கொண்டதன் பின்னணியில், இலங்கை அரசாங்கம் இருக்கும் என்ற ஐயம் எழுந்துள்ளது. அவ்வாறு இருக்குமானால், அது கண்டனத்துக்குரியது. எனவே, வைகோவை அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பிய மலக்‌ஷிய அரசாங்கத்துக்கு, இந்தியா, தனது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். அதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .