2020 நவம்பர் 28, சனிக்கிழமை

இளவரசர் வில்லியமுக்கு அடுத்த வருடம் திருமணம்

Super User   / 2010 நவம்பர் 16 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமுக்கும் அவரின் 8 வருடகால காதலியான கேட் மிடில்டனுக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் அவர்கள் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் பிரித்தானிய அரச குடும்பத்தினர் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.

கடந்த மாதம் கென்யாவில் விடுமுறையை கழிக்கச் சென்றபோது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் இது குறித்து கேட்டின் தந்தையிடமும் வில்லியம் பேசியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் வில்லியம் கேட் மிடில்டனும் 2001 ஆம் ஆண்டு செப்டெம்பரில் சென் அன்ட்றூஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்தில் முதன்முதலில் சந்தித்தனர். 2002 ஆம் ஆண்டு கல்லூரியில் நலநிதியமொன்றுக்கான நடைபெற்ற பெஷன் ஷோவொன்றில் கேட் மிடில்டனை கண்டதிலிருந்து அவர் மீது இளவரசர் வில்லியம் காதல் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2003 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து இவ்விருவரின் காதல் தொடர்பான செய்திகள் வெளியாகத் தொடங்கின.

எனினும் நீண்டகாலம் இருவரும் காத்திருந்ததால் இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்வி நிலவி வந்தது. அதற்கு நேற்று பதில் கிடைத்தது.

அடுத்த வருடம் இளவேனிற் பருவ காலத்தில் அல்லது கோடைக்காலத்தில் இத்திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஓகஸ்ட் 13 ஆம் திகதி இத்திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்தின்பின் இத்தம்பதியினர் வடக்கு வேல்ஸில் வசிப்பார்கள் எனவும் அரச குடும்பத்  தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு நடைபெற்ற, வில்லியமின் பெற்றோரான இளவரசர் சார்ள்ஸ்- டயானா தம்பதியின் திருமணத்தின் பின்னர் நடைபெறவுள்ள மிகப்பெரிய அரசகுடும்ப நிகழ்வாக இத்திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளவரசர் வில்லியமும், கேட்டும் நேற்றிரவு முதல் தடவையாக தொலைக்காட்சியொன்றுக்கு இணைந்து பேட்டியளித்தனர்.

இத்திருமண அறிவிப்பு குறித்து இளவரசர் சார்ள்ஸ், எலிஸபெத்  மகாராணியார், அவரின் கணவர் பிலிப், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் முதலானோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--