2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கனிமொழியின் பிணை மனுவை உச்ச நீதிமன்றமும் நிராகரித்தது

Super User   / 2011 ஜூன் 20 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் வைக்கப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரின் பிணை மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றின் விசேட நீதிபதிகள் குழாமொன்று இன்று திங்கட்கிழமை இம்மனுவை நிராகரித்தது. அதனால் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் இப்போதைக்கு சிறையிலிருந்து வெளிவருவது கேள்விக்குறியாகியுள்ளது.

எனினும் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அதே நீதிமன்றில்   புதிய பிணை மனுவை தாக்கல் செய்வதற்கு இவ்விருவருக்கும்  உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபா பணம் தொலைத்தொடர்பு அமைப்பொன்றினால் வழங்கப்பட்டமை குறித்த விசாரணைக்காக சி.பி.ஐ. பொலிஸார் கலைஞர் ரி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமாரையும் அதன் பணிப்பாளர்களில் ஒருவரான கனிமொழியையும் கைது செய்தனர்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் மோசடியில் கிடைத்த லாபத்திற்கான லஞ்சமாக மேற்படி 200 கோடி ரூபா கலைஞர் ரிவிக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த ஊழலில் பிரதான சந்தேக நபரான திமுகவைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவும் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .