2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

இந்தோனேஷிய எரிமலையிலிருந்து பெருமளவு சாம்பல் வெளியேற்றம்

Kogilavani   / 2011 ஜூலை 17 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தோனேஷியாவில் வெடித்துள்ள எரிமலையொன்றிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகளவான  எரிமலைக்குழம்பும் சாம்பலும் வெளியேறியுள்ளன. இதனால் சாம்பல் கலந்த புகை வானில் படர்ந்துள்ள நிலையில், அச்சமடைந்த கிராமவாசிகள் பலர், அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

வடக்கு சுலாவெசி தீவில் உள்ள லோகன் எனும் எரிமலையில் கடந்த, வியாழன் வெள்ளி தினங்களில் வெடிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து அப்பிரதேசத்திலிருந்து தப்பியோட முனைந்த  பெண்ணொருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:53 மணிக்கு மேற்படி எரிமலையிலிருந்து பாரியளவிலான சாம்பல் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  11,400 அடி உயரத்திற்கு  சாம்பல் புகை எழுந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

எரிமலை வெடிப்பினைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து மீண்டும் கிராமங்களுக்கு திரும்பியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இன்று அவர்களது வாகனங்களினூடாக மீண்டும் தற்காலிக முகாம்களுக்கு விரைந்துள்ளனர்.எரிமலைக்கு அப்பால் விலகியிருக்குமாறு அவர்களுக்கு அரசாங்கம் ஏலவே எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் மக்கள் பலர் தொடர்ந்தும் அப்பகுதிகளில் வசிக்கின்றனர்.

'எங்களுக்கு எங்களது வளர்ப்புப் பிராணிகளையும், பயிர்களையும் வைப்பதற்கு இடம் தேவைப்படுகிறது' என கிராமத்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லோகன் எரிமலையானது இந்தோனேஷியாவில் காணப்படும் சக்திவாய்ந்த  நிலையிலுள்ள 129 எரிமலைகளில் ஒன்றாகும்.   இது கடந்த 1991 அம் ஆண்டில் வெடித்தபோது 1000 பேர்  அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அத்துடன் சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த மலையேறி ஒருவர் பலியானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .