2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ரயில் மோதியதால் 7 யானைகள் பலி

Kogilavani   / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altஇந்தியாவில் 70 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துக்  கொண்டிருந்த சரக்கு ரயிலொன்று தண்டவாளத்தில் பயணித்துக் கொண்டிருந்த யானைகளின் மீது மோதியதால் 7 யானைகள் பரிதாபகரமாக இறந்துள்ளன. குறித்த ரயில் வண்டி இரவு வேளையில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் ஒரே ரயில் விபத்தில் அதிக எண்ணிக்கையான யானைகள் இறந்த சம்பவம் இதுவாகும்.

இச் சம்பவமானது மேற்கு வங்க  மாநிலத்தின் ஜால்பாய்குரி மாவட்டத்தில் பேனர்ஹார்ட் ரயில் நிலையத்திலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 3 பெண் யானைகளும் 2 இளம் யானைகளும் ஒரு குட்டியானையும் இறந்துள்ளன. அவற்றின் உடல்கள் சுமார் 250 மீற்றர்வரை இழுத்துச் செல்லப்பட்டிருந்தன.

"ரயில் சாரதி பிறேக்கை அழுத்துத் தவறியுள்ளார்.  ரயில் 70 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துள்ளது. இது ஒரு கொலைச் சம்பவம், விபத்து அல்ல" என்று வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.  

'இந்த விபத்தானது தேயிலைத் தோட்டமொன்றில் இடம்பெற்றுள்ளது. பார்வையை மறைப்பதற்கு உயரமான மரங்கள் எதுவும் அங்கில்லை. நிலவு ஒளியும் இருந்தபோது தண்டவாளத்திற்கு குறுக்கே இருந்த மேற்படி யானைகள் ரயில் சாரதிக்கு தென்படாமல் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு' என மேற்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு யானைகள் கடுமையான காயங்களுக்குட்பட்ட நிலையில் தண்டவாளத்திற்கு அப்பால் சற்று தூரத்தில் மறுநாள் அதிகாலை கண்டுப் பிடிக்கப்பட்டன. கிராமவாசிகள் அவற்றை சிகிச்சைக்காக ' கொருமாரா'  தேசிய பூங்காவிற்கு கொண்டு சென்றபோதும் அவை  இறந்துவிட்டன.

முதல் யானையின்மீது ரயில் மோதியவுடன் பிறேக்கை அழுத்தியிருந்தால் 5 யானைகளாவது காப்பாற்றப்பட்டிருக்கும் என வன விலங்குகள் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளதுடன் இது தொடர்பாக பொலிஸில் புகாரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .