2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

COVID-19: ஒன்றுகூடல்களுக்குத் தடை, பயணங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில் COVID-19-ஆல் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கையில், பாரிய ஒன்றுகூடல்களை ஐரோப்பா, மத்திய கிழக்கு, அமெரிக்காவிலுள்ள தலைவர்கள் தடை செய்துள்ளதுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்காவில் COVID-19-ஆல் முதலாவது நபர் நேற்று  உயிரிழந்துள்ள நிலையில், இத்தாலி, தென்கொரியாவிலிருந்து பயணிப்போர் மேலதிகமான கண்காணிப்பை எதிர்கொள்வார்கள் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், உயரதிகாரிகளும் வெள்ளை மாளிகை செய்தியாளர் மாநாடொன்றில் நேற்று தெரிவித்ததோடு, இரண்டு நாடுகளிலும் COVID-19-ஆல் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களுக்கு ஐக்கிய அமெரிக்கர்கள் பயணிப்பதற்கு எதிராக எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 14 நாள்களுக்குள் ஈரானுக்கு விஜயம் செய்த எந்தவொரு வெளிநாட்டுப் பிரஜையும் உள்ளடங்குமாறு ஈரானிலிருந்து பயணிப்போருக்கான உள்நுழைவுத் தடையானது விரிவாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடைக்கப்பட்ட இடங்களில் 5,000 பேருக்கு மேல் பொதுவெளியில் கூடுவதை தடை செய்யும் தற்காலிகத் தடையொன்றை அறிவித்துள்ளது.

இதேவேளை, 1,000க்கும் அதிகமானோர் கூடுவர் என எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளைத் தாம் தடை செய்வதாக சுவிற்ஸர்லாந்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இத்தாலியின் மூன்று வட பிராந்தியங்களிலுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் இரண்டாவது தொடர்ச்சியான வாரமாக மூடப்படவுள்ளன. இத்தாலியில் 1,100க்கும் மேற்பட்டோர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளதுடன், 29 உயிரிழப்புகள் COVID-19-ஆல் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, நாளை மறுதினம் வரை பாடசாலைகளை மூட உத்தரவிட்டுள்ள ஈரான், பல்கலைக்கழகங்களின் மூடல், விளையாட்டு நிகழ்வுகள், நிகழ்ச்சிகளுக்கன தடையையும் ஒரு வாரத்துக்கு நீடித்துள்ளது. ஈரானில் ஏறத்தாழ 600 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளதுடன், நாடாளமன்ற உறுப்பினரொருவர் உள்ளடங்கலாக 40க்கும் மேற்பட்டோர் COVID-19-ஆல் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் நேற்று COVID-19-ஆல் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ள நிலையில் சீனாவில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 2,870ஆக உயர்ந்துள்ளது. தவிர, நேற்று புதிதாக 573 பேர் COVID-19 தொற்றுக்குள்ளானதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவிக்கையில், மொத்தமாக சீனாவில் 79, 824 பேர் COVID-19-ஆல் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தென்கொரியாவில் COVID-19-ஆல் இன்று 586 பேர் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு COVID-19-ஆல் மொத்தமாக 3,736 பேர் பீடிக்கப்பட்டுள்ளதுடன், COVID-19-ஆல் அங்கு இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது அங்கு 18ஆக அதிகரித்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .