2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கணிப்புகளைத் தோற்கடித்து மீண்டும் ‘அம்மா’

Shanmugan Murugavel   / 2016 மே 19 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல், கடந்த 16ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில், அதன் முடிவுகள், இன்று காலை முதல் வெளியிடப்பட்டன.

234 தொகுதிகளில் 232 தொகுதிகளுக்காக வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. அரவாக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கெடுப்பு, ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தேர்தலுக்கு முன்னதாகவும் தேர்தலுக்குப் பின்னராகவும் வெளியிடப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில், ஜெயலிதா தலைமையிலான ஆளுங்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தோல்வி கிடைக்குமெனவும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வெற்றி கிடைக்குமெனவும் எதிர்வுகூறப்பட்டிருந்தது.

ஆனால், கணிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் தோற்கடித்த 'அம்மா" என அவரது தொண்டர்களால் அன்பாக அழைக்கப்படும் ஜெயலலிதா, தமிழ்நாட்டின் ஆட்சியைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டார்.

1987ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) இறந்த பின்னர், தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.கவும் தி.மு.கவும் மாறி மாறியே ஆட்சிக்கு வந்திருந்தன. ஆனால், 27 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக, அ.இ.அ.தி.மு.க, இரண்டு தவணைகளுக்கு ஆட்சி புரியவுள்ளது.

எதிர்பார்த்ததை விட மெதுவாகவே வந்த தேர்தல் முடிவுகளில், தொகுதிகளின் அடிப்படையில், ஆளும் அ.இ.அ.தி.மு.கவுக்கு 134 தொகுதிகளும் தி.மு.க கூட்டணிக்கு 98 தொகுதிகளும் வெற்றியாகக் கிடைத்தன. அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய விஜயகாந்த், சீமான் ஆகியோருக்கு, வெற்றி கிட்டியிருக்கவில்லை.

இந்தத் தேர்தல் முடிவு, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, மிகப்பெரிய அடியாகக் கருதப்படுகிறது. 91 வயதான கருணாநிதி, தி.மு.க வெற்றிபெற்றால் தானே முதலமைச்சர் என அறிவித்திருந்த நிலையில், அடுத்த தேர்தலில் போட்டியிடுவதோ, அதன் மூலம் முதலமைச்சராக வருவதோ, சாத்தியம் குறைந்த ஒன்றாக மாறியுள்ளது.

இன்று வெளியான ஏனைய தேர்தல் முடிவுகளில், எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளே கிடைத்தன. அஸாமில் பி.ஜே.பி கூட்டணிக்கு 87 ஆனங்களும் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 25 ஆசனங்களும் அனைத்திந்திய ஒற்றுமை ஜனநாயக முன்னணிக்கு 13 ஆசனங்களும் சுயாதீன வேட்பாளர் ஒருவருக்கு ஓர் ஆசனமும் கிடைத்தன.

மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அக்கட்சிக்கு 212 ஆசனங்களும் காங்கிரஸூக்கு 45 ஆசனங்களும் இடது முன்னணிக்கு 30 ஆசனங்களும் பி.ஜே.பிக்கு 7 ஆசனங்களும் கிடைத்தன.

கேரளாவில் இடதுசாரிகளுக்கு வெற்றி கிடைத்த அதேவேளை, புதுச்சேரியில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு 17 ஆசனங்கள் கிடைத்து, அக்கூட்டணி வெற்றிபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .