Editorial / 2018 ஜனவரி 01 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழு, ரஷ்யாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதா என்பது தொடர்பான விசாரணை, குடிபோதையில் உளறிய ஒருவர் காரணமாகவே ஆரம்பித்தது என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரம்ப் பிரசாரக் குழுவின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான ஆலோசராக இருந்து, தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் ஜோர்ஜ் பப்படோபொலஸே, இவ்வாறு குடிபோதையில் உளறிய நபராவார்.
சக்தி தொடர்பான சட்டத்தரணியான பப்படோபொலஸ், 2016ஆம் ஆண்டு மே மாதத்தில், இலண்டனிலுள்ள மதுபான நிலையமொன்றில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இராஜதந்திரியான அலெக்ஸான்டர் டவ்னருடன் உரையாடியுள்ளார். அதன்போது அவர், அப்போது வேட்பாளராக இருந்த ஹிலாரி கிளின்டன் தொடர்பான இரகசியங்களை, ரஷ்யா கொண்டிருக்கிறது என, குறித்த இராஜதந்திரியிடம் கூறியுள்ளார்.
அச்சம்பவம் இடம்பெற்று 2 மாதங்களின் பின்னர், ஹலாரி கிளின்டனின் ஜனநாயகக் கட்சி மின்னஞ்சல்கள் கசியத் தொடங்க ஆரம்பிக்க, மதுபான நிலையத்தில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பாக, புலனாய்வுக் கூட்டாண்மை முகவரகத்திடம் (எப்.பி.ஐ), அவுஸ்திரேலியா அறிவித்தது.
அதைத் தொடர்ந்தே, இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் போது, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து உள்ளிட்ட சில தோழமை நாடுகளின் புலனாய்வுத் தகவல்களும், எப்.பி.ஐ-க்குக் கிடைத்தன என்று கூறப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள இந்தத் தகவல், ட்ரம்ப் குழுவுக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும், மேலதிகமாக அழுத்தங்களை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஹிலாரி கிளின்டனின் பிரசாரக் குழுவால், வேட்பாளர் ட்ரம்ப் தொடர்பாக ஆராயப் பயன்படுத்தப்பட்ட இரகசிய அறிக்கையை வைத்தே, ரஷ்யா தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது என, ஜனாதிபதியும் அவரது ஆதரவாளர்களும் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், அவரது குழுவைச் சேர்ந்த ஒருவரே, வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவருக்குக் கூறிய தகவல்கள் மூலமாகவே, விசாரணை ஆரம்பிக்கப்பட்டது என்பது, முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அதேபோல், கைதுசெய்யப்பட்ட பின்னர், தன் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டு, விசாரணைகளுக்கு ஒத்துழைத்துவரும் பப்படோபொலஸ், தமது பிரசாரக் குழுவில் சிறிது காலமே பணியாற்றினார் எனவும், உயர் பதவியை வகித்திருக்கவில்லை எனவும், ட்ரம்ப் குழு தெரிவித்து வந்தது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, சில மாதங்களில், பிரசாரக் குழுவின் உத்தியோகபூர்வமான பொறுப்பிலிருந்து பப்படோபொலஸ் விலகியிருந்தாலும், பிரசாரக் குழுவில் அவரது பங்களிப்புக் காணப்பட்டது எனக் கூறப்படுகிறது.
அப்போதைய வேட்பாளர் ட்ரம்ப்புக்கும், எகிப்தின் ஜனாதிபதி அப்டெல் ஃபட்ட அல்-சிசிக்கும் இடையிலான சந்திப்பை, பப்படோபொலஸ் தான் ஏற்பாடு செய்தார் எனவும், ஏப்ரல் 2016இல், வேட்பாளர் ட்ரம்ப்பின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான முதலாவது பெரிய உரை இடம்பெற்ற நிலையில், அதில் முக்கியமான பங்களிப்பை, பப்படோபொலஸ் ஆற்றியிருந்தார் எனவும், தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago