2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

மரணத்துக்கு அருகில் நொபெல் வெற்றியாளர்

Editorial   / 2017 ஜூலை 13 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமாதானத்துக்கான நொபெல் பரிசு வென்ற சீனரான லியூ ஸியாவோபோ, மரணிக்கும் தருணத்தை நெருங்கியுள்ளார் என, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வெளிநாடுகளுக்குச் சிகிச்சை பெறுவதற்காக அவரை அனுப்ப வேண்டுமென்ற கோரிக்கைகள், தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

ஜனநாயகத்துக்காகப் போராடி, பின்னர் சிறையிலடைக்கப்பட்டு, தற்போது புற்றுநோய் காரணமாகச் சிகிச்சை பெற்றுவரும் 61 வயதான லியூ பற்றி, சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

அவருக்கு, அவயவ செயலிழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் சுவாசத்தில் பிரச்சினையை எதிர்கொள்வதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, அவரை உயிருடன் வைத்திருப்பதற்கு, செயற்கை சுவாசம் தேவைப்படுவதாகவும், ஆனால் அதை வழங்குவதற்கு, அவரது குடும்பத்தினர் சம்மதிக்கவில்லையெனவும், வைத்தியசாலை தெரிவிக்கிறது.

ஆனால், அவரது உடல்நிலை பற்றி, உண்மையான தகவல்களை, சீனா வெளியிடுகிறது இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் மனித உரிமைகள் அமைப்புகள், வைத்தியசாலையின் தகவல்களை, நம்ப முடியாதன என வர்ணித்து வருகின்றன.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவும் ஜேர்மனியும் தாய்வானும், இது சம்பந்தமான தங்கள் கரிசனை வெளிப்படுத்தியுள்ளதுடன், அவர் விரும்பும் நாட்டில், அவருக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கின்றன.

அவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு மறுப்புத் தெரிவிக்கும் சீனா, கிடைக்கக்கூடிய உச்சபட்ச சிகிச்சையை அவர் பெற்றுவருகிறார் எனத் தெரிவிக்கிறது. கடுமையான சர்வதேச அழுத்தத்தின் பின்னர், ஐ.அமெரிக்காவையும் ஜேர்மனியையும் சேர்ந்த வைத்தியர்கள், லியூவைப் பார்வையிடுவதற்கு, சீனா அனுமதித்திருந்தது. அந்த வைத்தியர்கள், வெளிநாட்டுக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்கு, அவருக்கு ஆரோக்கியம் காணப்படுவதாக அறிவித்த போதிலும், அவர் இறக்கவுள்ளார் என்றவாறான தகவல்களையே, வைத்தியசாலை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .