2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

லெபனான் அமைச்சு கட்டடங்களுக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லெபனானியத் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள அரசாங்க அமைச்சுகளுக்குள் நுழைந்த லெபனானிய ஆர்ப்பாட்டக்காரர்கள், லெபனானிய வங்கிகளின் சங்கத்தின் அலுவலகங்களை நேற்று சேதப்படுத்தியுள்ளனர்.

கடந்த வார பெய்ரூட் வெடிப்புத் தொடர்பிலான கோபாவேசமான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வருகையிலேயே குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அரசியல்வாதிகள் இராஜினாமா செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததுடன், கடந்த செவ்வாய்க்கிழமை வெடிப்புக்கு வழிவகுத்த கவனக்குறைவுக்காக தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறியிருந்தனர். குறித்த வெடிப்பில் 158 பேர் கொல்லப்பட்டதுடன், 6,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இந்நிலையில், மேற்கூறப்பட்ட மோதல்களில் பொலிஸ் அதிகாரியொருவர் கொல்லப்பட்டதாக பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களால் துரத்தப்பட்டதைத் தொடர்ந்து அருகிலுள்ள கட்டடமொன்றின் மின்தூக்கி சுழல்தண்டொன்றுக்குள் வீழ்ந்தே பொலிஸ் அதிகாரி இறந்ததாக சம்பவ இடத்திலிருந்த இன்னொரு பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் 117 பேருக்கு காயங்களுக்காக சிகிச்சையளித்ததாகத் தெரிவித்த செஞ்சிலுவைச் சங்கம், இன்னொரு 55 பேர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

வெளிநாட்டமைச்சுக்குள் நுழைந்த டசின் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மிஷெல் அவோனின் படத்தை எரித்திருந்தனர்.

இந்நிலையில், துப்பாக்கி வேட்டுக்களும், இறப்பர் குண்டுக்களும் பிரயோகிக்கப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்திய நிலையில் யார் துப்பாக்கிவேட்டுக்களை தீர்த்தது என உடனடியாகத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி டசின் கணக்கான கண்ணீர்ப்புகைக்குண்டுகளை கலகமடக்கும் பொலிஸார் பிரயோகித்த நிலையில், ஆர்ப்பாட்டகாரர்கள் கற்களால் திருப்பித் தாக்கியிருந்தனர்.

இதேவேளை இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி முற்கூட்டிய நாடாளுமன்றத் தேர்தல்கள் என லெபனான் பிரதமர் ஹஸன் டியப் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--