2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனானது பலாலி விண்மீன்

Editorial   / 2017 மே 21 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.கண்ணன்

பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடாத்திய, குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான, வடமராட்சி அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில், பலாலி விண்மீன் அணி சம்பியனாகியது.   

பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில், நேற்று (20) நடைபெற்ற இறுதிப் போட்டியில், பலாலி விண்மீன் அணியை எதிர்த்து, வதிரி பொம்மேர்ஸ் அணி மோதியது.   

இடைவேளைக்கு முன்னரான ஆட்டத்தில், இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால், இரண்டு அணிகளாலும் கோல் எதனையும் பெற முடியவில்லை. இருப்பினும், வதிரி பொம்மேர்ஸ் அணி வீரர் சாரங்கன், பலாலி விண்மீன் அணியின் பின்கள வீரர்களைத் தாண்டி பந்தைக் கொண்டு சென்றபோது, பலாலி விண்மீன் அணி வீரர்கள் முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த, வதிரி பொம்மேர்ஸ் அணிக்கு, பெனால்டி கிடைத்தது. இதனை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கோலாக்க, சற்றும் சளைக்காத பலாலி விண்மீன் அணியினர், தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்த மூன்றாவது நிமிடத்தில், பலாலி விண்மீன் அணி வீரர் டேமியன் ஒரு கோலைப் பெற்று பதிலடி கொடுத்தார். இதனால், இடைவேளைக்கு முன்னர், இரண்டு அணிகளும் சம கோல்களைப் பெற்றுக் கொண்டன.   

இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில், பெம்மேர்ஸ் அணி, தமது பின்கள தற்காப்பு வீரர்களை பலப்படுத்திக்கொண்டு, முன்கள வீரர்கள் முன்னேறிப்பாயும் தாக்குதலில் விளையாட்டை நகர்த்தத் தொடங்கினர். இதனால், பலாலி அணியினர், பொம்மேர்ஸ் அணியின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிலைகுலைந்தனர். ஆனால், பொம்மேர்ஸ் அணியினர் அதனைக் கோலாக்கத் தவறிவிட்டனர். இதனால் இரண்டு அணிகளும் பலப்பரீட்சை நடாத்த, இடையே முறுகல் நிலையும் ஏற்பட்டது. மத்தியஸ்தர்களால் எச்சரிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இரண்டாவது பாதியின் 15ஆவது நிமிடத்தில், பலாலி விண்மீன் அணி வீரர் யூட்,  தனது அணிக்காக கோல் ஒன்றை பெற்றுக் கொடுக்க, ஆட்ட நேர முடிவில், பலாலி விண்மீன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சம்பியன் கிண்ணத்தைத் தமதாக்கிக் கொண்டது.   

இப்போட்டியின் நாயகனாக, பலாலி விண்மீன் அணியின் முன்கள வீரர் டேமியன் தெரிவுசெய்யப்பட்டார். சம்பியனாகிய விண்மீன் அணிக்கான கிண்ணத்தை, தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் வழங்கினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .