2021 மார்ச் 04, வியாழக்கிழமை

JPL: ஜொனியன்ஸ், சென்றலைட்ஸ், ஸ்கந்தா ஸ்டார் வெற்றி

Gopikrishna Kanagalingam   / 2016 ஜூலை 10 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் யாழ்ப்பாண பிறீமியர் லீக்கில், கடந்த சனிக்கிழமை (09) இடம்பெற்ற போட்டிகளில் ஜொனியன்ஸ், ஸ்கந்தா ஸ்டார், சென்றலைட்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 

ஜொனியன்ஸ், கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய  ஜொனியன்ஸ், 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக பிருந்தாபன் ஆட்டமிழக்காமல் 35, அகிலன் 34, ஜதுசன் 21 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கொக்குவில் மத்தி சார்பாக, சாம்பவன் 3, தனுக்ஷன், உத்தமன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பதிலுக்கு, 193 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்தி கிரிக்கெட் கழகம், 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே இழந்து 55 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக ஆதித்தான் 34, ஜனுதாஸ் 31, பானுஜன் 27 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொனியன்ஸ் சார்பாக பிருந்தாவன் 2, கபிலன், லவேந்திரா, ஜதூசனன், சன்சயன், அன்புஜன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக பிருந்தாபன் தெரிவானார். 

சென்றலைட்ஸ், ஜொலிஸ்ஸ்டார் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்றலைட்ஸ், ஜொலிஸ்ஸ்டாரை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்ஸ்டார், 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, கல்கோவன் 50, சஜீகன் 41, வாமணன் 32  ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சென்றலைட்ஸ் சார்பாக மயூரன் 3, மதூஷணன் 1 விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

212 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ், 19 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக ஜேம்ஸ் 74, இம்முறை இடம்பெற்ற வடக்கின் மாபெரும் சமரில் சதம்பெற்ற கிருபா ஆட்டமிழக்காமல் 43, ஜெனோசன் 21 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொலிஸ்ஸ்டார் சார்பாக வாமணன் 3, குவானந்த், தீபன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் வீழ்த்தினர். போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் தெரிவானார். 

ஸ்ரீகாமாட்சி, ஸ்கந்தாஸ்டார் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கந்தாஸ்டார், ஸ்ரீகாமாட்சியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீகாமாட்சி, 12.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, மோகன்ராஜ், கஜீவராஜ், சுதர்சன் ஆகியோர் தலா 15 ஓட்டங்களையும் சுஜன் 10 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்கந்தாஸ்டார் சார்பாக புருஜோத்தமன், சிந்துஜன், தரணிதரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் விஷ்ணு பிரசாந், துவிசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

103 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தாஸ்டார், 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக கஜீவன், கதியோன்‌ ஆகியோர் ஆட்டமிழக்காமல் தலா 36 ஓட்டங்களையும் மிதுஷாந் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ரீகாமாட்சி சார்பாக வீழ்த்தப்பட்ட விக்கெட்டை, ராம் வீழ்த்தினார். போட்டியின் நாயகனாக கஜீவன் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .