2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

கீழைத்தேய வாத்திய இசைச் சங்கமம்

Super User   / 2011 மார்ச் 04 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(க.கோகிலவாணி)

இலங்கையின் பாரம்பரிய வாத்தியங்களை இணைத்து 'கீழைத்தேய வாத்தியங்களின் இசைச் சங்கமம்' எனும் இசை நிகழ்வை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில், நடத்துவதற்கு அரு ஸ்ரீ கலையரங்கு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கை, நோர்வே அரசுகளுக்கிடையேயான இசை கலாசார பரிமாற்றல் உடன்படிக்கையின்கீழ், நோர்வே தூதரகம், மற்றும் கொன்சர்ட்ஸ் நோர்வே நிறுவனம் ஆகியன இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கான அனுசரணை வழங்குகின்றன.

பிரபல கீழைத்தேய முன்னணி இசைக்கலைஞரான கலாசூரி திருமதி அருந்ததி ஸ்ரீரங்கநாதனின் வழிகாட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

மூத்த கலைஞர்களான கலாநிதி நிர்மலா குமாரி ரொட்ரிகோ, சாஸ்திரபதி குமார லியனவத்த, சோமசிறி இளையசிங்க, எஸ்.மகேந்திரன், விஜயரட்ன ரணதுங்க, பாலம்பிகை இராஜேஸ்வரன், பியசார சில்பாதிபதி ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

'இலங்கையில் வாழும் நான்கு இனத்தவர்களும் தமக்கான இசை அடையாளங்களை கொண்டுள்ளனர். இவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக கீழைத்தேய வாத்தியங்களின் இசைச் சங்கமம் அமையப்போகின்றது' என கலாசூரி, அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இச்செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
 
இந்நிகழ்வில், அனைத்து கீழைத்தேய இசைக் கலைஞர்களையும் ஒரே மேடையில் சங்கமிக்கச் செய்வதே இச் செயற்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

தேர்வு செய்யப்படும் கலைஞர்களுக்கு தரமான பயிற்சிகளை வழங்குதல், சிரேஷ்ட கலைஞர்களிடமிருந்து கற்றுக்கொள்ளல், அவர்களுடன் இணைந்து பணியாற்றல், இலங்கையில் வேறுப்பட்ட சமூகத்திடையே காணப்படும் இசை மரபுகளை அறிந்துகொள்ளல், அவற்றை கற்றுக்கொள்ளல், அந்தக் கலைகளையும் மதித்து நடத்தல், மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்துதல், பல புதிய கலைஞர்களை உருவாக்குதல் போன்ற அடிப்படை விடயங்களுக்காக மிகவும் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த கலைஞர்களுக்கு சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுப்பதும் இந்த செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த இசை நிகழ்விற்கு அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த கீழைத்தேய வாத்தியக் கலைஞர்கள் விண்ணப்பிக்க முடியும். இதற்காக விசேட தகுதிகள் ஏதும் எதிர்பார்க்கப்படவில்லை. வாத்தியக்கருவிகளை இசைக்கும் திறமை இருந்தால் போதுமானது' என்றார்.

இந்த இசை நிகழ்வில் பங்குபற்றுவதற்காக 37 இசைக்கருவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படும் என அருந்ததி  ஸ்ரீரங்கநாதன் மேலும் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் ஆரம்பப் படிநிலையாக இலங்கையின் அனைத்து பாகங்களிலுமுள்ள கீழைத்தேய இசைக்கருவிகளை இசைப்பவர்களை அடையாளம் காண்பதற்கான நடைமுறை இடம்பெறும். 

தமது மாவட்டங்களில் இளம் கலைஞர்களுக்கு இசைக்கருவிகiளை இசைக்கக் கற்றுக் கொடுப்பதற்கும் மற்றும் கொழும்பில் நடைபெறவுள்ள இறுதி நிகழ்வுக்கு தயார் செய்வதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்றுவிப்பாளர்களாக இருப்பதற்கு இசை வாத்தியக் கச்சேரி நடத்தியவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பங்குபற்றும் இளம் கலைஞர்கள் 18-35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

'இந்த கீழைத்தேய இசை சங்கமானது இன, மத, ஜாதி, பேதமின்றி இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றது. இந்த இசை சங்கமத்தில் இலங்கையில் வாழும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகிய நான்கு இனத்தவர்களும் பங்குபற்றி தங்களுக்குரிய இசை மரபை வெளிப்படுத்த வேண்டும். இதில் ஆண்கள் மற்றும்தான் பங்குப்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. பெண்களும் முன்வந்து பங்குபற்றலாம். இப்போட்டி இருபாலருக்கும் பொதுவானது.

நாங்கள் அனைவருக்குமான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கின்றோம். திறமையுள்ளவர்கள் இதில் பங்குப்பற்றி தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பம்' என தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவி பனிப்பாளர் பிரபாத் லியனகே கூறினார்.


யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சங்கீத செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் இந்நிலையில் இந்த இசை கீழைத் தேய வாத்திய இசைக் சங்கமம் வரவேற்கத்தக்கது எனவும் யாழ் பல்கலைக்கழக நுண்கலை பீட விரிவுரையாளர் எஸ். மகேந்திரன் தெரிவித்தார்.

   
நிகழ்ச்சித் திட்ட குழுவின் உறுப்பினர்களாக  கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன், 'இன்ஸ்டிரியூட் ஒவ் ஹியூமன் எக்ஸலன்ஸ் - IHE'  நிறுவன பணிப்பாளர் வியாசா கல்யாணசுந்தரம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் பிரபாத் லியனகே, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி கலாசார பணிப்பாளர் ரசித்த தெல்பொல, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் இசைப் பனிப்பாளர் அஜித் தர்ஷன ஜெயவீர, கல்வியமைச்சு அழகியற் கலை பணிப்பளர் வருண அழக்கோன் ஆகியோர் உள்ளனர்.

துறைசார் கலைஞர்களும் இளம் கலைஞர்களும் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

கீழைத்தேய வாத்திய இசைச் சங்கமம்', இல 03, றிட்ஜ்வே பிளேஸ், கொழும்பு -04.
மின்னஞ்சல் : oriental.orchestra@gmail.com

தொலைபேசி 0777-274859 (க.வியாசா - பணிப்பாளர் IHE)

(Pix by: Kushan Pathiraja)


 


  Comments - 0

  • Thilak Saturday, 05 March 2011 07:20 PM

    இது சிறந்த நடவடிக்கை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--