Kogilavani / 2015 நவம்பர் 23 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வானம் அழுது
பூமிக்குவந்த மழை
நாங்கள் அழுத
கண்ணீரில்
நனைந்தது...
நிலம் கடலானது
குளம் கூளமானது
ஆறு ஏழானது
எங்கள் வாழ்வு பாழானது....
ஒரு நாளில்....
அன்று மழைவேண்டி
தொழுதவர்கள்
இன்று
மழை தீண்டி
அழுதுகொண்டிருக்கிறோம்....
போன வருடப் போரில்
தோற்றுப்போய்
புறமுதுகிட்டோடிய
மழையரசன்...
இம்முறை
கோடானகோடி
போர்வீரர்களோடும்
இடிமின்னல்களோடும்
புயலோடும் வந்து
அடித்த அடியிலும்
இடித்த இடியிலும்
கோட்டை
கொத்தளங்களை இழந்து
கட்டடங்களை
கட்டியணைத்து
கதறிக்கொண்டிருக்கிறோம்.
குளத்தை
துடிக்கத் துடிக்க கொன்றோம்
ஆற்றினை சிறை பிடித்தோம்
வயல் நிலங்களை
சிலுவையில் அறைந்தோம்...
மரங்களின் கரங்களை
முறித்தோம்
காட்டினை கதறக்கதற
கற்பழித்தோம்...
காட்டு மிராண்டிகள்
நாங்கள்
இயற்கைக்கு செய்தகொடுமை
கொஞ்சநஞ்சமல்ல....
நேற்று நாங்கள் விதைத்தோம்
இன்று அறுவடை செய்கிறோம்....
இயற்கை என்பது
சிங்கம் புலி போன்று
சினம் கொண்டதல்ல
நாயைப்போன்று
நன்றியுள்ளது
வாழவைத்தால் வாலாட்டும்
காதலோடு
காவலிருக்கும்
நாங்கள்
கல்லெடுத்து அடித்தால்
கடிக்குமா..
இல்லை
வா... வந்து
என்னை கொல்லென்று
செங்கம்பளம் விரித்து
வரவேற்குமா....?
இயற்கையை
கொன்றொழித்த
அயோக்கிய
கொலைகாரர்கள் நாங்கள்
வாருங்கள்...
மரங்களை நட்டு
மன்னிப்புகேட்போம்...
கடந்தகால தவறுகளை
நாம் கொல்லாதவரை...
எம்மை திருத்திக்கொள்ளாதவரை
தொடர்ந்தும்
இதுபோல் கொல்லென
கொல்லும் மழை....
கவிஞர் அஸ்மின்
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026